/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க கேமரா!
/
நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க கேமரா!
ADDED : ஆக 23, 2024 12:46 AM
பாலக்காடு;பாலக்காடு மாவட்டத்தில், சாலையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை கண்காணித்து தடுக்க, கூடுதல் கேமராக்களை பொருத்த, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் திறன் கொண்ட ஐந்து கேமராக்கள் வழக்கமாக குப்பை கொட்டி செல்லும் பகுதிகளில் நிறுவும் பணிகள் நடக்கிறது.
இது குறித்து, திட்ட ஒப்பந்த நிறுவனமான 'கெல்ட்ரான்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலக்காடு நகரத்தில், சாலையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க, கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை நகராட்சி கொண்டு வந்துள்ளது.
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தின், சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்தி, பி.ஒ.சி., சாலை, பேழுங்கரை, ஒலவக்கோடு மேம்பாலம், மருத்துவக் கல்லூரியின் முன் பக்கம், கோழிக்கோடு பைபாஸ் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் ஆகிய ஐந்து இடங்களில், தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் திறன் கொண்ட கேமரா நிறுவும் பணிகள் நடக்கிறது.
ஒரு கேமராவின் விலை இரண்டு லட்சம் ரூபாயாகும். கேமரா பொருத்தும் பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து, கேமராக்கள் செயல்பட துவங்கும்.
குப்பைக் கொட்டிச் செல்லும் நபர் குறித்தும், வாகனங்களின் எண் உட்பட உள்ள தகவல்கள் இந்த கேமரா வாயிலாக கிடைக்கும்.
எவ்வளவு தூரம் நின்றாலும் வாகனங்களின் நம்பர் பிளேட் பதிவு செய்வது இந்த கேமராவின் தனிச்சிறப்பாகும். பதிவு செய்யப்படும் காட்சிகள், இரு மாதங்கள் வரை, கேமரா மெமரியில் இருக்கும்.
இதற்கு முன்பாக, நகரின் பல்வேறு இடங்களில் போலீசாருக்கு உதவும் வகையில், 177 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி உள்ளோம். தற்போது அது செயல்பாட்டில் உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

