/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திட்ட சாலையில் போகவே முடியல! ஆக்கிரமிப்பால் அலறல்
/
திட்ட சாலையில் போகவே முடியல! ஆக்கிரமிப்பால் அலறல்
ADDED : ஆக 01, 2024 10:34 PM
உடுமலை : திட்ட சாலை ஆக்கிரமிப்பால், அவ்வழியாக செல்வதை வாகன ஓட்டுநர்கள் தவிர்ப்பதால், நகரின் பிரதான ரோடுகளில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, சில ஆண்டுகளுக்கு முன், திட்டச்சாலைகள் கண்டறியப்பட்டு, மேம்படுத்தும் பணி துவங்கியது.
அவ்வகையில், பல்லடம் மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வராமல், செல்ல நுாறு அடி திட்ட சாலை அமைக்கப்பட்டது.
கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், அவ்வழியாக செல்லும் வகையில், ரோடு மேம்படுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் கட்டப்பட்டது.
தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், மழை நீர் ஓடை அருகே பிரிந்து, அனுஷம் ரோடு சேரும் வகையில் இந்த திட்ட சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த ரோட்டில், சென்டர்மீடியனை ஒட்டி வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது; பழுது பார்க்கும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அங்கு நிறுத்தப்படுகிறது.
இதனால், திட்டச்சாலை குறுகலாகி, கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை; பிற வாகனங்கள் செல்லவும் இடையூறாக உள்ளது.
இதனால், அனைத்து வாகன ஓட்டுநர்களும் திட்டச்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து, மாநில நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டியுள்ளது.
இப்பிரச்னையால், நகரின் பிரதான ரோடுகளில், நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினரும், போக்குவரத்து போலீசாரும் ஆய்வு செய்து, உடனடி தீர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.