/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறண்ட மேய்ச்சல் நிலங்கள் பரிதவிக்கும் கால்நடைகள்
/
வறண்ட மேய்ச்சல் நிலங்கள் பரிதவிக்கும் கால்நடைகள்
ADDED : பிப் 27, 2025 08:48 PM
பொள்ளாச்சி, ; கிராமங்களில் நிலவும் வறட்சியால், தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்கப் பெறாமல் கால்நடைகள் பரிதவிக்கின்றன.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும், குறைந்த சதவீத பரப்பில் மட்டுமே தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
அதனால், சாகுபடி நிலங்களில் வைக்கோல், சோளத்தட்டு, விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் இருக்கும் புற்களை நம்பி கால்நடை வளர்ப்போர் உள்ளனர். கடந்தாண்டு மழைப்பொழிவு கைகொடுத்ததால், கால்நடை வளர்ப்போருக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதுவரை, எவ்வித பிரச்னையும் இன்றி சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பகலில் நிலவும் கடும் வெயில் காரணமாக, வறட்சி நிலவுகிறது. நீராதாரமிக்க குளம், குட்டைகள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலங்கள், காய்ந்து கிடப்பதால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தீவனம் கிடைக்காத நிலையில், வெயிலின் தாக்கத்தால், சோர்வடைந்து விடுகின்றன. இதனால், பால் உற்பத்தியும் பாதிக்கிறது.
கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'பசுந்தீவனம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பகலில் குறைந்த நேரம் மட்டுமே கால்நடைகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படுகிறது.
மார்ச், ஏப்., மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.