/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாம் முறையாக மாறியது... மறுபடியும்!கோவை ஓட்டுப்பதிவு சதவீதம்!
/
மூன்றாம் முறையாக மாறியது... மறுபடியும்!கோவை ஓட்டுப்பதிவு சதவீதம்!
மூன்றாம் முறையாக மாறியது... மறுபடியும்!கோவை ஓட்டுப்பதிவு சதவீதம்!
மூன்றாம் முறையாக மாறியது... மறுபடியும்!கோவை ஓட்டுப்பதிவு சதவீதம்!
ADDED : ஏப் 23, 2024 02:57 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மூன்றாம் முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. கடைசியாக, 64.89 சதவீத ஓட்டுகள், ஓட்டுச்சாவடியில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, 19ம் தேதி நடந்தது. அன்றைய தினம் இரவு, கோவை லோக்சபா தொகுதியில், 72.17 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யப்பிரதா சாஹு தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான ஓட்டுப்பதிவு சதவீத பட்டியலையும் வெளியிட்டார்.
வழக்கமாக, ஓட்டுப்பதிவன்று இரவு கொடுக்கப்படும் சதவீதம் உத்தேசமாக இருக்கும்; பூத் வாரியாக பதிவான ஓட்டு விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டு, மறுநாள் வழங்கும்போது, ஓட்டு சதவீதம் சொற்ப அளவில் உயரும்.
இம்முறை சதவீதம் உயர்வதற்கு பதிலாக, குறைவாக இருந்ததால், வாக்காளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
ஓட்டு சதவீதத்தில் அதிக வித்தியாசம் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்தது.
ஏனெனில், கோவை லோக்சபா தொகுதியில் பதிவானது, 64.81 சதவீதம் என மறுநாள் தெரிவிக்கப்பட்டது. முந்தைய நாள், 72.17 சதவீதம் என கூறப்பட்டது. 7.36 சதவீதம் வித்தியாசம் ஏற்பட்டதால், குழப்பம் நீடித்தது.
இந்திய தேர்தல் ஆணையம் இத்தேர்தலில், 'என்கோர்' என்கிற செயலி பயன்படுத்தியது. அச்செயலில், ஓட்டுப்பதிவு விபரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
பூத் வாரியாக ஓட்டுப்பதிவு விபரங்களை, பதிவேற்றுவதில் அலுவலர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதி செய்யப்பட்டு, மதியம், 12:45 மணியளவில் அதிகாரப்பூர்வமாக, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
இதன்படி, கோவை தொகுதியில் ஓட்டுப்பதிவு விபரம், மூன்றாம் முறையாக மாற்றப்பட்டு, 64.89 சதவீதமாக சொல்லப்பட்டு உள்ளது. இனி, தபால் ஓட்டுகள் சேர்க்கப்படும்.
இதுவரை, 7,103 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் கோவை தொகுதிக்கு பதிவான ஓட்டுகள் பெறப்பட்டு, இதனுடன் சேர்க்கப்படும்.
இவை தவிர, ராணுவ வீரர்கள் ஓட்டு, எண்ணுவதற்கு முன்பு வரை பெறப்படும். அதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் இன்னும் மாறுதலுக்கு உட்பட்டது என, தேர்தல் பிரிவினர் கூறுகின்றனர்.

