பணம் பறித்த இருவர் கைது
கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராஜன்,52; டூவீலர் மெக்கானிக். இவர் நல்லாம்பாளையம், அம்மையப்பர் வீதியில் நடந்து சென்ற போது, எதிரே வந்த இருவர் வழிமறித்து, மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தர மறுத்ததால், அவரை பிடித்து, பாக்கெட்டில் இருந்த ரூ.400யை பறித்து விட்டு தப்பி ஓடினர்.
ராஜன் கவுண்டம்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரின், கவுண்டம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ஜானகிராமன், 27, சாமூண்டீஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார், 19 ஆகிய இருவரை கைது செய்தனர்.
புகைபிடித்தவர் கைது
காட்டூர் போலீசார், காலிங்கராயன் வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு இருந்த பேக்கரியின் முன் வாலிபர் ஒருவர் புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். பொது இடத்தில் புகை பிடித்ததற்காக, அவரை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
ராஜவீதி பகுதியில் வெரைட்டி ஹால் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கார் பார்க்கிங் பகுதியில் இருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போத்தனுார், கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த அக்பர் அலி, 24, அஸ்லாம், 25 மற்றும் குறிச்சி பிரிவு பகுதியை சேர்ந்த அப்துல் நாசர், 23 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ 150 கிராம் கஞ்சா, பைக் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
33 மதுபாட்டில்கள் பறிமுதல்
வெவ்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில், சட்ட விரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பீளமேடு போலீசார் ஹோப் காலேஜ் பகுதியில் ரோந்து சென்ற போது, புதுக்கோட்டையை சேர்ந்த பார்த்திபன்,28 என்பவரிடம் இருந்து, 10 மதுபான பாட்டில்களும், ராமானுஜர் பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த அருள்சாமி, 51 என்பவரிடம் இருந்து, எட்டு பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், சரவணம்பட்டி போலீசார் பழைய சத்தி ரோட்டில் ரோந்து சென்ற போது, நேதாஜி நகரை சேர்ந்த குமார், 21 என்பவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த, 15 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.