ADDED : ஆக 19, 2024 10:48 PM
கஞ்சா பறிமுதல்
வடகோவை பகுதியில் காட்டூர் போலீசார், நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு ரோந்து சென்றனர். வடகோவை மேம்பாலத்தின் அடியே சென்றபோது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ரத்தினபுரி, குட்டியப்பா வீதியை சேர்ந்த வீரா,41, என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வீராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணிக்கு இடையூறால் கைது
டவுன்ஹால் பகுதியில், பெரிய கடைவீதி போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். வைசியாள் வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, கரும்புக்கடையை சேர்ந்த ஹக்கீம்,37, சர்புதீன்,35, முகமது அஜ்மல் ஹூசைன்,34, சுண்டக்காமுத்துாரை சேர்ந்த ஹரிரவீந்திரா,21, உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அன்சர்,28, செல்வபுரத்தை சேர்ந்த அதிபதி,24, ஆகியோர் நின்றுகொண்டு, சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். ரோந்து போலீசார் விசாரித்தபோது, தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பணிக்கு இடையூறாகவும் இருந்ததாக, போலீசார் வழக்கு பதிந்து ஆறு பேரையும் கைது செய்து, பின்னர் கோர்ட் ஜாமினில் விடுவித்தனர்.
ரூ.20 ஆயிரம் திருடியவர் கைது
செல்வபுரம், சொக்கம்புதுாரை சேர்ந்தவர் ஷேக் ஆகாஷ் அலி, 57. இவர் வீட்டிலேயே 'டெய்லரிங்' தொழில் செய்துவருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டாமல் ஓய்வெடுக்க சென்றவர், துாங்கி எழுந்துவந்து பார்த்தபோது, பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் காணாமல் போயிருந்தது. உடனடியாக, செல்வபுரம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது மேற்கு வங்கத்தை சேர்ந்த கச்சினா பாலுதாஸ்,31, என்பவர் வீட்டில் புகுந்து திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மொபைல் போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.

