/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு மைதானத்தில் கொட்டப்படும் களிமண்
/
விளையாட்டு மைதானத்தில் கொட்டப்படும் களிமண்
ADDED : ஆக 18, 2024 11:02 PM

கோவை;விளையாட்டு மைதானத்தில் களிமண்ணை கொட்டுவதாக, கவுன்சிலர் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியின், 20வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகர், நான்காவது பிளாக் இருந்து வருகிறது. இங்கு குடியிருப்புகளுக்கு நடுவே, 1.8 ஏக்கர் பரப்பில், விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள், நடைபயிற்சி உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வந்தனர். அதேபோல், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடி வந்தனர்.
சிறுவர்களின் வசதிக்காக சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நாளடைவில், இம்மைதானம் சற்று சிதிலமடைந்தது. இதையடுத்து அந்த மைதானத்தை குடியிருப்புவாசிகள், தங்களது சொந்த செலவில் சரி செய்தனர்.
ஆனால், தற்போது அம்மைதானத்தை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு அந்த வார்டு கவுன்சிலர் மரியராஜ் மாற்றியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் களிமண் லாரிகளில் எடுத்து வரப்பட்டு, இம்மைதானத்தில் கொட்டப்படுகிறது.
களிமண் என்பதால், மழைகாலங்களில் இப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. சிறுவர்கள் அங்கு விளையாட முடிவதில்லை. இதுகுறித்து அப்பகுதியினர் கவுன்சிலரிடம் கேட்ட போது, அவர் மிரட்டுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கூறுகையில், 'இம்மைதானத்தில், பூங்கா அமைத்து தர கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்திடம், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அது நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, நாங்களே ஒரு சிலர் சேர்ந்து, வேறு மண்ணை விலைக்கு வாங்கி குழந்தைகளை விளையாட ஏற்பாடு செய்தோம். ஆனால், தற்போது கவுன்சிலர் வேறு எங்கோ எடுக்கப்படும் களிமண்ணை லாரிகளில் கொண்டு வந்து, இரவில் கொட்டுகிறார். இதுகுறித்து கேட்டால், அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட உள்ளோம்' என்றார்.
கவுன்சிலர் மரியராஜ் கூறுகையில், ''மாநகராட்சி பாதாள சாக்கடை பணிகள், 24 மணி நேர குடிநீர் பணிகளுக்காக தோண்டப்படும் மண்தான் அங்கு கொட்டப்படுகிறது. பணிகள் முடிந்த உடன் அங்கிருந்து அவை அகற்றப்படும்.
மற்றபடி நான் யாரையும் கூட்டிச் சென்று மிரட்டவில்லை. பிரச்னை ஏற்பட்ட உடன் போலீசாருடன் தான் சென்றேன். இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம். அங்கு பூங்கா அமைக்க, நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அங்கு மாநகராட்சி நகர்நல மையமும் அமைக்கப்பட உள்ளது. என் மீது கூறும் புகார் பொய்யானது,'' என்றார்.

