/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கணும்! முன்னாள் அமைச்சர் முதல்வருக்கு கடிதம்
/
கோவை, திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கணும்! முன்னாள் அமைச்சர் முதல்வருக்கு கடிதம்
கோவை, திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கணும்! முன்னாள் அமைச்சர் முதல்வருக்கு கடிதம்
கோவை, திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கணும்! முன்னாள் அமைச்சர் முதல்வருக்கு கடிதம்
ADDED : மே 09, 2024 04:27 AM
கிணத்துக்கடவு,: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தாமோதரன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவு தென்னை விவசாயம் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தேங்காய் விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், தென்னையில் வாடல் நோய் தாக்குதலால், மரங்கள் பரவலாக வெட்டப்படுகின்றன. இதை தொடர்ந்து நோயை கட்டுப்படுத்த அரசு, தோட்டக்கலை மற்றும் வேளாண் பல்கலைக்கழக அலுவலர்கள் வாயிலாக, நோய் தாக்குதல் ஏற்பட்ட மற்றும் வெட்டப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்கியது. தேர்தல் நாளான, ஏப்., 19ம் தேதி ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
வாடல் நோய் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ள நிலையில், அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், கடுமையான வறட்சி காரணமாக, கிணறு, போர்வெல்லில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
சில இடங்களில், தண்ணீர் எடுத்தால் நிலத்தடி நீர் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மக்கள் நீரை எடுக்க அனுமதிப்பதில்லை. தற்போது, இரண்டு மாவட்டங்களிலும், 500 ஏக்கருக்கும் அதிகமாக தென்னை வெட்டப்பட்டுள்ளது. தென்னையை காப்பாற்ற விவசாயிகள் போராடுகின்றனர்.
எனவே, தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில், விவசாயிகள் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கவும், வெட்டப்படும் மரத்திற்கு விவசாயிகள் கோரும் நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
இந்த இரண்டு மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்து, அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட மரத்திற்கு மாற்றாக வேளாண் பல்கலை ஆலோசனைப்படி மாற்றுப்பயிர் செய்ய உதவி செய்ய வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு தீவனங்கள் போதிய அளவு இல்லை. எனவே, கடந்த, 2016 - 2017ம் ஆண்டில் வழங்கியதை போன்று, உலர் தீவனம் இலவசமாகவும், மானியத்திலும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.