/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!
/
சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!
சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!
சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!
ADDED : ஆக 22, 2024 12:43 AM

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு நிபந்தனையின்றி வழங்குவதாக, தமிழக அரசு கடிதம் கொடுத்திருப்பதால், இழுபறியாகவே தொடர்ந்த விரிவாக்கப்பணிகள், விரைவில் துவங்கவுள்ளன. இதனால், கோவை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை, பீளமேட்டில், 420 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது; 9,500 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைந்திருக்கிறது. சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும், பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல வசதி இல்லாததால், ஓடுபாதையை, 12 ஆயிரத்து, 500 அடி நீளம் கொண்டதாக விரிவாக்கம் செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதற்கு தேவையான, 652 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க, தமிழக அரசை கேட்டுக்கொண்டது.
அதில், பாதுகாப்பு துறைகளுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தனியார் நிலங்களில், 558.87 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள, விமான நிலைய ஆணையத்துக்கு கலெக்டர் கிராந்திகுமார் கடிதம் அனுப்பினார்.
தொய்வு ஏற்பட்டது ஏன்?
ஆனால், சிவில் ஏவியேஷன் கொள்கை 2016ன் படி, எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்பதால், ஆணையம் தரப்பில் குத்தகைக்கு நிலத்தை பெற முன்வரவில்லை. இதன் காரணமாக, விமான நிலைய விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் சமயத்தில், இப்பிரச்னை கிளம்பியது. அப்போது, 'தேர்தல் முடிந்ததும் சுமூக தீர்வு காணப்படும்' என, தி.மு.க., தரப்பில் உறுதி கூறப்பட்டது. அதன்படி, தற்போது, தனியார் நிலங்கள் கையகப்படுத்தும் பணி, 97 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது; இம்மாத இறுதிக்குள் முடிக்க, மிதமுள்ள நிலத்தை கையகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பின், நில உரிமையாளர்கள் யாரேனும் இழப்பீடு பெறாமல் இருந்தால், அதற்குரிய தொகையை கோர்ட்டில் செலுத்தி விட்டு, கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.
முதல்வருடன் சந்திப்பு
இச்சூழலில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்க, கோரிக்கை விடுத்தார்.
அதற்கு முன்னதாகவே, தமிழக அரசு கையகப்படுத்திய பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களை, எவ்வித நிபந்தனையுமின்றி, 99 ஆண்டு குத்தகைக்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு இலவசமாக வழங்குவதாகவும்; விமான நிலையத்தை தனியார் வசம் வழங்கும் பட்சத்தில், வருவாயை தமிழக அரசுக்கு பகிர்ந்து கொடுக்க பரிசீலிக்க வேண்டும் எனவும், இந்திய விமான நிலைய ஆணைய தலைவருக்கு, தமிழக அரசின் தலைமை செயலர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதன் மூலம் நிலத்தை ஒப்படைப்பதில், இருந்த சிக்கல் விலகியிருப்பதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஏனெனில், கையகப்படுத்திய நிலத்தை ஆணையம் வசம் ஒப்படைத்து விட்டால், விரிவாக்கப் பணி உடனடியாக துவங்கும். மும்பையை சேர்ந்த நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்து, தயார் நிலையில் இருக்கிறது.
'மாஸ்டர் பிளான்' ரெடி!
கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், ''விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை, 99 ஆண்டு குத்தகைக்கு நிபந்தனையின்றி வழங்குவதாக, தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 'மாஸ்டர் பிளான்' தயாராக இருக்கிறது. நிலம் ஒப்படைக்கப்பட்டதும், விரிவாக்கப் பணிக்கு டெண்டர் கோரப்படும். ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் பணி துவங்கும்,'' என்றார்.
நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரியதும் பணிகள் துவங்கும் என்பதால், தொழில்துறையினருக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.