/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.63 கோடியில் சமுதாயக் கூடம்
/
ரூ.1.63 கோடியில் சமுதாயக் கூடம்
ADDED : ஆக 31, 2024 01:40 AM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சியில், ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், 1.63 கோடி ரூபாய் செலவில், சமுதாயக் கூடம் கட்ட, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு அதிக அளவில் விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் வசிக்கின்றனர். சிறுமுகை நகரில் சிறியதும், பெரியதுமாக ஐந்து மண்டபங்கள் உள்ளன. இருந்த போதும் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பேரூராட்சி சார்பில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து சிறுமுகை பேரூராட்சி மன்ற கூட்டத்தில், சமுதாயக்கூடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், தலைவர் மாலதி உதயகுமார் ஆகியோர் கூறியதாவது: சிறுமுகை பேரூராட்சியில் வனத்துறை அலுவலகம் எதிரே, பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. இந்த போலீஸ் ஸ்டேஷன், ரேயான் நகருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தற்போது இந்த இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தில், 6,200 சதுர அடியில், 1.63 கோடி ரூபாய் செலவில் சமுதாயக் கூடம் கட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டு மாடி கட்டடத்தில் மணமகன், மணமகள் அறைகள், சமையல் கூடம், சாப்பிடும் ஹால், கழிப்பிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில், 250 பேர் உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாகவும், 100 பேர் சாப்பிடுவதற்கு வசதியாகவும் சமுதாயக்கூடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
சமுதாயக்கூடம் கட்டி முடியும் பொழுது, சிறுமுகை பேரூராட்சியில் உள்ள பொது மக்களுக்கு, குறைவான வாடகையில் நிகழ்ச்சிகள் நடத்த உகந்த இடமாக அமையும். இவ்வாறு செயல் அலுவலர் மற்றும் தலைவர் கூறினர்.