/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாய கல்வி, உரிமை சட்டம்; மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு
/
கட்டாய கல்வி, உரிமை சட்டம்; மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு
கட்டாய கல்வி, உரிமை சட்டம்; மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு
கட்டாய கல்வி, உரிமை சட்டம்; மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு
ADDED : செப் 12, 2024 09:40 PM
போத்தனுார் : ''கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் மாநில அரசு செயல்படுகிறது,'' என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறினார்.
கோவை, சுந்தராபுரத்தில் அவர் அளித்த பேட்டி:
கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதில் அனைவருக்குமான பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை பெற்றுக்கொண்டு, 25 சதவீத மாணவர்களுக்கு, மற்ற மாணவர்களுக்கு இணையான கல்வி வழங்கவேண்டும் என்பது இச்சட்டத்தின் முக்கியமான அம்சம். ஆனால், சட்டம் அமலாகி, 15 ஆண்டுகளாகியும் இச்சட்டத்தின் பலன் முழுமையாக ஏழை மாணவர்களுக்கு சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த, 2013-14 கல்வியாண்டில், 8 ஆயிரத்து 575 தனியார் பள்ளிகளில் இச்சட்டம் மூலம் சேர்க்கை நடந்தது. தற்போது, 7 ஆயிரத்து, 594 ஆக குறைந்துவிட்டது.
2017-18 கல்வியாண்டில் எல்.கே.ஜி. - யு.கே.ஜி., படித்த மாணவர்கள், ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 180 பேர். 2023--24ல் ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 615 ஆக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்த, தமிழ்நாடு அரசின் முடிவுதான்.
2017-- 18ல் இம்மாணவர்களுக்கு மாநில அரசு செலவிட்ட தொகை, 119. 64 கோடி. அதுவே, 2022--23ல் 77.69 கோடியாக குறைந்துவிட்டது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயில்வோருக்கு செலவிடும் தொகையில், மத்திய அரசு 60 சதவீதத்தை தந்துவிடுகிறது. அதனால் ஒரு மாணவனுக்கு மாநில அரசு செலவிடும் தொகை ஆண்டுக்கு சராசரியாக ஆறாயிரம் மட்டுமே.
மாநில அரசு, 300 கோடி செலவு செய்தால், 4.5 லட்சம் குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் படிக்க வைக்க முடியும். மாநில அரசு பள்ளி கல்விக்காக செலவிடும் தொகை ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி. இதில், 80 லட்சம் பேர் படிக்கின்றனர். இதன் சராசரி ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரமாகும்.
இதை ஒப்பிடும்போது கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு அரசு செலவிடும் தொகை மிக, மிக குறைவாகும்.
மத்தியபிரதேசம், பீகார் மாநிலங்கள் இத்திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி, அதிகளவு மாணவர்களுக்கு இவ்வாய்ப்பினை பெற்றுத்தருகின்றன. அனைவருக்கும் அனைத்து பள்ளியிலும் இடம் கிடைக்கும்போது சமத்துவம் ஏற்படும்.
ஆதலால் இத்திட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் புதிய நிபந்தனைகளை அரசு உருவாக்க கூடாது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முறையாக, நேர்மையாக, பயன்படுத்தி ஏழை மாணவர்கள் பயனடைய அரசு வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும்.
இவ்வாறு, ஈஸ்வரன் கூறினார்.