/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரையில் அக்கறை; ஒரு குழாயின் கதை
/
சர்க்கரையில் அக்கறை; ஒரு குழாயின் கதை
ADDED : பிப் 10, 2025 05:44 AM

சர்க்கரை பாதிப்புக்கும், உறுப்புகள் செயலிழப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்குகிறார் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
அவர் கூறியதாவது:
எங்கள் மருத்துவ முகாம்கள் வாயிலாக கிராமங்களிலும் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர்களை பார்க்க முடிந்தது. இதை ஒரு புள்ளி விபரமாக கடந்து சென்று விட முடியாது. இந்தியாவில் இன்று பல கோடி பேர் சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைக்கு காரணம், மரபணுக்கள், துரிதமான பொருளாதாரம், உணவு முறை மாற்றம் மற்றும் உடல் உழைப்பின்மையே காரணம். நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவு வகைகளால், சத்தான உணவில் மாற்றம் பெருமளவு நிகழ்கிறது.சர்க்கரை ஒழுங்காக கட்டுப்படுத்தாவிட்டால், கூடவே பல நோய்களும் வந்து விடும் என, கூறப்படுகிறது.
இதனால், பல உறுப்புகள் செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏன் டாக்டர் எங்களை பயமுறுத்துகிறீர்கள்? சர்க்கரை நோய்க்கும், மாரடைப்பு, வாதம், பார்வை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, கால் இழப்புக்கும் என்ன சம்பந்தம்? என, பலர் கேட்பதுண்டு.ஒரு குழாயில் தெளிவான நீர் வேகமாக ஓடினால் குழாயின் உட்பகுதி சீராக இருக்கும். அதே குழாயில் கழிவுகள், அசுத்தங்கள் மிகுந்த நீர் ஓடினால் என்னவாகும். குழாயின் உட்பகுதியில் இவை பாசி போல் படிய துவங்கும். தொடர்ந்து நடக்கும் போது, இவை பெரிதாகி, அக்குழாயின் உட்பகுதியை முழுவதும் அடைத்துவிடும். அதுபோல் தான் அதிக சர்க்கரை, ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பால், ரத்த குழாயின் உட்பகுதியில் அடைப்பு ஏற்படும். இதனால், மாரடைப்பு, வாதம், சிறுநீரகப் பழுது ஆகிய பிரச்னைகளை தவிர்க்க முடியாது.
இவற்றுடன், புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். இன்று இந்தியாவில் பல குடும்பங்கள் பெரிய மருத்துவமனைகளில் சேர்ந்து உடலால், பணத்தால், மனதால் உடைந்து போவதற்கு முக்கிய காரணம், சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு. 'A' ('ஏ'1'சி' என்றால் சர்க்கரை நோயின் மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி, 'B' என்றால் ரத்தஅழுத்தம், 'C' என்றால் கொலஸ்ட்ரால். இந்த மூன்று பங்காளிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் நம் நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்கள் நன்றாக இருக்கும்.
(இந்த மூன்றுகுறியீடுகள் குறித்து அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாமா?...)