/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல்; பந்தல் அமைத்தால் அவ்ளோதான்!
/
பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல்; பந்தல் அமைத்தால் அவ்ளோதான்!
பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல்; பந்தல் அமைத்தால் அவ்ளோதான்!
பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல்; பந்தல் அமைத்தால் அவ்ளோதான்!
ADDED : செப் 11, 2024 10:19 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், 1,243 பதிவு பெற்ற தள்ளுவண்டி கடைகள் உள்ளன. அதுமட்டுமின்றி பதிவு பெறாத தள்ளுவண்டிகளில் விற்பனையும் நடைபெறுகிறது. இந்நிலையில், ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, சாலையோர வியாபாரிகள், தற்காலிக கடைக்காரர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில், நகராட்சி கமிஷனர் கணேசன் பேசுகையில், ''சாலையோரங்களில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், வியாபாரம் செய்ய வேண்டும்.
''தினமும், வண்டியை எடுத்துச் சென்று மீண்டும் வியாபாரம் செய்யும் வகையிலேயே அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் வியாபாரம் செய்யும் இடத்தில் பந்தல் போடுதல், தடுப்புகள் அமைத்தல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கைகள் போடுதல் போன்ற நிரந்தரமாக இடத்தை பிடித்து வியாபாரம் செய்யும் வகையில் செயல்படக்கூடாது. தொடர்ந்து செயல்படுவது கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நகராட்சி பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்காரர்கள், தாங்களாகவே முன்வந்து பந்தல், தடுப்புகளை அகற்றிக்கொண்டனர். இந்நிலையில், பயன்பாடு இல்லாமல் பல நாட்களாக நிறுத்தப்பட்ட தள்ளுவண்டிகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மகாலிங்கபுரம் பகுதியில் பயன்பாடு இல்லாமல் நிறுத்தப்பட்டு இருந்த, தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்து, வாகனத்தில் ஏற்றி, சுதர்சன் நகர் வாட்டர் டேங்க் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது போன்று, தள்ளுவண்டிகளை அகற்றிக்கொள்ளாமல், பயன்பாடு இல்லாமல் நிறுத்தப்பட்ட ஆறு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில், ஒரு வண்டி உரிமையாளர் மட்டும், 500 ரூபாய் அபராதம் செலுத்தி இதுபோன்று வாகனங்களை நிறுத்த மாட்டேன் என உறுதியளித்துச் சென்றார். உரிமம் கோராத பட்சத்தில் தள்ளுவண்டிகள் பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.