/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
/
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 27, 2024 10:18 PM

தொண்டாமுத்தூர் : கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம், வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று முன்தினம் நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில், 130 மி.மீ., அடிவாரத்தில், 63 மி.மீ., தொண்டாமுத்தூர் பகுதியில், 17 மி.மீ., மழையும் பெய்துள்ளது.
இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்தரைச்சாவடி தடுப்பணையில், நேற்று வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் வெளியேறியது.
நொய்யல் ஆற்றில் இருந்து வாய்க்காலுக்கு, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தால், நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும்.
இந்நிலையில், கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, 'செல்பி' எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும்.