/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தருக்கும் 'கவர்' நேர்மையான ஆபீசருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் !
/
கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தருக்கும் 'கவர்' நேர்மையான ஆபீசருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் !
கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தருக்கும் 'கவர்' நேர்மையான ஆபீசருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் !
கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தருக்கும் 'கவர்' நேர்மையான ஆபீசருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் !
ADDED : ஆக 26, 2024 10:39 PM
ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்த சித்ரா, சுவாமி தரிசனம் முடித்து விட்டு, வெளியே வந்தாள்.
'பார்க்கிங்' ஏரியாவில் மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்த மித்ராவை பார்த்து, ''என்னப்பா... ஏதாச்சும் விசேஷமா... கோவிலுக்குள்ளே வராம பேசிக்கிட்டு இருக்கீயே...'' என, கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா... நம்மூர் போதைக் கலாசாரத்துக்கு மாறிட்டு இருக்கு; ஸ்டூடன்ஸ் போதைக்கு அடிமையாகிட்டு இருக்காங்க; போலீஸ்காரங்க மாமூல் வாங்கிட்டு கண்டுக்காம இருக்காங்கன்னு, கொஞ்ச நாளைக்கு முன்னால பேசிட்டு இருந்தோமே... ஆக., 13ம் தேதி நம்ம பேப்பர்ல நியூஸ் வந்துச்சு. புதுசா வந்திருக்கிற எஸ்.பி., கார்த்திகேயன் 'என்கொயரி' நடத்தியிருக்காரு. அப்போ, அவருக்கு 'ஷாக்' ரிப்போர்ட் கெடைச்சிருக்கு,''
''அதுக்கப்புறம்தான், தேதி குறிச்சு, கருமத்தம்பட்டி லிமிட்டுக்குள்ள சோதனை நடத்தி, கல்லுாரி மாணவர்களை குறி வச்சு, கஞ்சா, போதை பொருட்கள் விக்கிற கும்பலை, 'அரெஸ்ட்' பண்ணியிருக்காரு. இதே மாதிரி, எல்லா டிவிசனுக்குள்ளும் அதிரடியா நடவடிக்கை எடுக்கப் போறாராம்...''
மாமூல் போச்சே!
''நார்த்துக்கு புதுசா வந்திருக்கிற டெபுடி கமிஷனரு, சட்ட விரோத மது விற்பனையை, கன்ட்ரோலுக்குள்ள கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்றாரு. நைட் 10 மணியாச்சுன்னா; ஒயின் ஷாப்பையும், 'பார்'களையும் மூடணும்னு கறாரா சொல்லிட்டாராம்.
இல்லேன்னா, அவரே களத்துல இறங்குறாராம்; கடையை இழுத்து மூடுறதுக்கு 'ஆர்டர்' போடுறாரு; சரக்கு பாட்டில் வச்சிருந்தா பறிமுதல் செஞ்சிடுறாரு. அதனால, 'இல்லீகல் சேல்ஸ்' குறைஞ்சிடுச்சாம். அதிரடி ஆக்சன்ல இறங்குனதுனால, ஸ்டேஷன் மாமூல் 'கட்'டானதுனால, போலீஸ்காரங்க 'அப்செட்'டுல இருக்காங்களாம்,''
மசாஜ் சென்டர் கசமுசா
''அதெல்லாம் இருக்கட்டும்... மசாஜ் சென்டர்ல்ல இல்லீகல் சமாச்சாரம் நடக்குதாமே...''
''ஆமாப்பா... உண்மைதான்! கமிஷனர் வரைக்கும் கம்ப்ளைன்ட் போயிருக்கு.- மசாஜ் சென்டர் ஆரம்பிக்கணும்னா, --நுண்ணறிவு பிரிவுல இருக்குற இன்ஸ்., ஒருத்தருக்கு லட்சக்கணக்குல கரன்சி வெட்டணுமாம். அப்புறம்... மாசந்தவறாம மாமூல் கொடுக்கணுமாம். அதனால, தைரியமா இல்லீகல் சமாச்சாரம் செய்றாங்களாம். கமிஷனர் காதுக்கு தகவல் போயிருக்கு; அவரே நேரடி ஆக்சன்ல இறங்கப் போறதா சொல்றாங்க,''
மன்னிப்பு கேளுங்க!
''கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு, ஆட்டோ ஓட்டிக்கோங்கன்னு, பீளமேடு போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னாங்களாமே... என்ன விவகாரம்...''
''அதுவா... ஹோப் காலேஜ் ஏரியாவுல ஆட்டோ ஸ்டாண்டுகள் இருக்கு. சிலரை தவிர, வேற யாரும் ஆட்டோ ஓட்ட முடியாதாம். வேற யாராச்சும் வந்தா, அவுங்க சொல்ற நேரத்துல மட்டும் ஓட்டணுமாம். பகலில் ஓட்டச் சொன்னா பகலிலும், நைட் ஓட்டச் சொன்னா நைட்டுல மட்டும் ஓட்டணுமாம்...''
''அவுங்க இம்சை தாங்காத இளைஞர் ஒருத்தரு, ஸ்டேஷன்ல போயி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு; ஆக்சன் எடுக்கலை. கமிஷனர் மேல நம்பிக்கை வச்சு, கமிஷனர் ஆபீசுல கம்ப்ளைன்ட் கொடுத்தாரு.
கமிஷனர் ஆபீசுல இருந்து பீளமேடு ஸ்டேஷனுக்கு, 'பார்வேர்டு' பண்ணியிருக்காங்க. அங்கிருந்த போலீஸ்காரங்க, சம்பந்தப்பட்ட இளைஞரை வரச்சொல்லி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு, பொழப்பை பாரு தம்பின்னு, புத்திமதி சொல்லி அனுப்பியிருக்காங்க... இப்படித்தாம்ப்பா இருக்கு போலீஸ் நெலமை,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
ஆளுக்கொரு கவர்
பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''கார்ப்பரேஷன் கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தருக்கும், மினிஸ்டர் ஒரு கவர் கொடுத்தாராமே...'' என, நோண்டினாள்.
''அதுவா... ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும், கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கும் மினிஸ்டர் முத்துசாமி அப்பப்போ 'கிப்ட்' கொடுப்பாரு. அதே மாதிரி, டாடாபாத்துல இ.பி., ஆபீஸ் பக்கத்துல இருக்கற கட்சிக்காரர் ஓட்டலுக்கு, அழைப்பு விடுத்திருக்காரு. ஜோன் வாரியா கவுன்சிலர்கள் போயிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கவர் கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு கவரிலும் ஒரு 'ல'கரம் இருந்துச்சாம். கூட்டணி கட்சியைச் சேர்ந்த சில கவுன்சிலர்கள,் அடம் பிடிச்சு கூடுதலா வாங்கிட்டு போனதா, உடன்பிறப்புகள் சொல்றாங்க,''
''இந்த கவனிப்பெல்லாம் எதுக்காம்...''
''புது மேயர் தலைமையில இந்த மாசம் மாமன்ற கூட்டம் நடக்கப் போகுது. ஏற்கனவே மேயர் தேர்வுல 'கசமுசா' நடந்து, விரும்பத்தகாத சம்பவம் நடந்துச்சு. அதே மாதிரி, முதல் கூட்டத்துல ஏதாச்சும் நடந்துடக் கூடாதுன்னு, கட்சி தலைமையில உஷாரா இருக்காங்க. கவுன்சில் கூட்டத்துல 'சைலன்ட்'டா இருக்கணும்; ஒற்றுமையா செயல்படனும்னு, 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க,''
நெருக்கமான பந்தம்
''ஆளுங்கட்சியில துணை முதல்வர் கோஷம் இருக்கு. அ.தி.மு.க.,வுல துணை முதல்வர் கோஷம் வருதாமே...''
''ஆமாப்பா... லோக்சபா எலக்சன்ல ஏற்பட்ட தோல்வி சம்பந்தமா, அ.தி.மு.க., தரப்புல ஆய்வு கூட்டம் நடத்துறாங்க. அதுல, 'மாஜி' அமைச்சர் வேலுமணியை, 2026ல ஜெயிச்சா இ.பி.எஸ்., முதல்வர், எஸ்.பி.வி., துணை முதல்வருன்னு கட்சி நிர்வாகிகள் பேசியிருக்காங்க. அதைக்கேட்டு, 'மாஜி' பதறிப் போயிட்டாராம்...''
''அதிருக்கட்டும்... பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே கருத்து மோதல் காரசாரமா ஓடிட்டு இருக்கு. ஆனா, வேலுமணி மகனுக்கு நடத்துன திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில, பா.ஜ., - எம்.எல்.ஏ., கலந்துக்கிட்டாராமே...''
''ஆமாப்பா... முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கலந்துக்கிட்டாங்க. விழாவுக்கு போயிருந்த பா.ஜ., எம்.எல்.ஏ., வேலுமணியோட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாராம். இது சம்மந்தமா விசாரிச்சதுக்கு, தாய் மாமன் வழியில பெண் வீட்டார், எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தக்காரங்களாம். இப்போ, பந்தம் ரொம்ப நெருக்கமாகிடுச்சுன்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க,''
நேர்மைக்கு சஸ்பெண்ட்
''திராவிட மாடல்ன்னு மேடைக்கு மேடையா பெருமையா பேசுறாங்க. ஆனா, கவர்மென்ட் டிபார்ட்மென்ட்டுல எந்த ஆபீசரும், நேர்மையா இருக்க முடியறதில்லையாம்... உடனே, துாக்கிடுறாங்களாம்,''
''என்னப்பா... கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்...''
''அக்கா... எஜூகேஷன் டிபார்ட்மென்ட்டுல அடிக்கடி ஆபீசர்களை டிரான்ஸ்பர் பண்றாங்க; பதவியில இருந்து துாக்கிடுறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சூலுாரை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி ஒருத்தரு, ஸ்கூலுக்கு ஆய்வுக்கு போயிருக்காரு.
ஹெச்.எம்.,க்கு பதிலா வேறொரு லேடி டீச்சர் கிளாஸ் எடுத்திருக்காங்க. இது சம்பந்தமா 'என்கொயரி' செஞ்சப்போ, அந்த ஹெச்.எம்., ஸ்கூலுக்கு வர்றதே இல்லையாம். அவருக்கு பதிலா, பிரைவேட்டா ஒரு டீச்சரை அப்பாயின்மென்ட் பண்ணியிருக்காராம்; அவுங்களுக்கு மாசம் அஞ்சாயிரம் ரூபா சம்பளம் கொடுத்திருக்காரு,''
''இதை ஆதாரப்பூர்வமா கண்டுபிடிச்ச ஆபீசர், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்காரு. அதனால, ஹெச்.எம்.,க்கும் ஆபீசருக்கும் இடையே, 'லடாய்' ஏற்பட்டிருக்கு. இதுக்கு இடையில, மாவட்ட கல்வி அதிகாரியை வேற ஊருக்கு துாக்கியடிச்சிட்டாங்க. திரைமறைவுல என்னென்ன நடந்துச்சுன்னு தெரியலை.
டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஆபீசர், நம்மூர்ல இருந்து கெளம்புறதுக்கு முன்னாடி, ஆய்வுக்கு போன ஆபீசரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டு போயிருக்காரு. இதை கேள்விப்பட்டு, டீச்சர்ஸ் கொந்தளிப்புல இருக்காங்க,''
போலி உத்தரவு
''மித்து, இதாவது பரவாயில்லை. இன்னொரு ஆபீசர் செஞ்ச அடாவடியை சொல்றேன் கேளு. மிரண்டு போயிருவே... என்னான்னா, ரூரல் வட்டார கல்வி அதிகாரியா இருக்கற ஒருத்தரு, அரசு உதவி பெறும் ஸ்கூல்ல வேலை பார்க்குற டீச்சர்கிட்ட, பல 'ல'கரம் வாங்கிட்டு, சிட்டிக்குள்ள இருக்குற ஒரு ஸ்கூலுக்கு, அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்திருக்காரு.
அந்த ஆர்டர் காப்பியோட ஸ்கூலுக்கு போன டீச்சருக்கு, செம ஷாக். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கையெழுத்து, முத்திரை எல்லாமே போலியா தயாரிச்சதாம். பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும், போலீசுக்கும் கம்ப்ளைன்ட் குடுத்தும், இதுவரைக்கும் நடவடிக்கை இல்லையாம். ஆளுங்கட்சி செல்வாக்குல பதவியில இருக்காராம்,''
//
பொய் பொய்யா சொல்றாங்க
''எப்பப்பார்த்தாலும் போக்குவரத்து டிபார்ட்மென்ட்டுல, பொய் பொய்யா சொல்றாங்களாமே...''
''ஆமாப்பா... உண்மைதான்! பண்டிகை சமயத்திலும், வாரக்கடைசியிலும் சிறப்பு பஸ் இயக்கப் போறதா, கலெக்டர் ஆபீஸ் வழியா ஸ்டேட்மென்ட் விடுறாங்க. ஆனா, பஸ் விடுறதில்ல. அறிக்கை வெளியிடுற போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரோ, பொது மேலாளரோ அல்லது துறையை சேர்ந்த மத்த ஆபீசர்களோ, பஸ் ஸ்டாண்ட் பக்கம் எட்டிப் பார்க்கறதே இல்லை... ''
''இப்போ, தொடர்ச்சியா மூனு நாள் லீவு வந்துச்சு; சிறப்பு பஸ் இயக்கறதா சொன்னாங்க. ஆனா, சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து, மதுரைக்கு 5:30ல இருந்து, 8:30 மணி வரைக்கும் ரெண்டு பஸ் இயக்கற அளவுக்கு பயணிகள் இருந்தாங்க; ஆனா, பஸ் இயக்கலை. மண்டல மேலாளருக்கு தகவல் போயிருக்கு. அவர், அதிகாரிகள்கிட்ட கேட்டதுக்கு, 'சரியாத்தான் போகுது'ன்னு பொய் சொல்லியிருக்காங்க,''
''அதுக்கப்புறம், நைட் 8:45க்குதான் மதுரைக்கு பஸ் விட்டிருக்காங்க. ஒவ்வொரு பஸ்சும் எப்போ கெளம்புச்சுன்னு டைமிங் கிளார்க்கிட்ட புக் இருக்கும்; அதை பார்த்தா தெரிஞ்சிரும்னு சொல்றாங்க. அடுத்து விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை வரப்போகுது... இதே மாதிரி போக்குவரத்து கழகத்துக்காரங்க செஞ்சா, பப்ளிக் ரொம்ப கஷ்டப்படுவாங்க,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்தை கடந்து சென்றாள் சித்ரா.
வக்கீல்களுக்கு ஆசை
''அரசு தரப்பு வக்கீல் பதவியை கைப்பத்துறதுக்கு பலரும் 'மூவ்' பண்றாங்களாம்...''
''அதுவா... அரசு வக்கீல்கள் சிலருக்கு சரியா வாதிடுற தெறமை இல்லை... கோர்ட்டுல சரியா ஆஜராகறதில்லை... சில பேரு வசூல்ல குறியா இருக்காங்கன்னு, ஆளுங்கட்சி தலைமைக்கு புகார் போயிருக்கு. அவுங்கள மாத்தப் போறதா பேச்சு உலாவுது. அதனால, பதவியை தக்க வைக்கிறதுக்கு, சில வக்கீல்கள் சென்னையில தங்கி, காரியத்தை முடிச்சிட்டு வந்திருக்காங்களாம்.
போன தடவை அரசு வக்கீல் பதவி கிடைக்காதவங்களும், சென்னைக்கு போயி, மினிஸ்டர்களை சந்திச்சு அழுத்தம் கொடுத்துட்டு வந்திருக்காங்களாம். யார் யாருக்கு பதவி கிடைக்கும்னு தெரியலை,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.