ஒரு வயது குழந்தை மாயம்
காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் வீடற்ற நிலையில், நடைபாதையில் குடும்பத்தினருடன் துரை, 42, வசித்து வருகிறார்.
கட்டட கூலி தொழிலாளி. இவரது மனைவி எலிசபெத், 24. இவர்களது மகன் வெற்றிவேல், 1. கடந்த 7ம் தேதி இரவு துரை, வெற்றிவேலுக்கு பால் வாங்கி கொடுத்துவிட்டு தூங்க வைத்தார். பின் நள்ளிரவில் முழித்து பார்த்த போது குழந்தை காணவில்லை. குழந்தையை அருகில் உள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, 8ம் தேதி காலை காரமடை போலீஸ் ஸ்டேஷனில் துரை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தும், தனிப்படை அமைத்தும் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் தாய் எலிசபெத் முன்னுக்கு பின் முரனாக போலீசாருக்கு பதில் அளித்ததை அடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'குழந்தை மாயமானது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம். குழந்தை கடத்தப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை விரைவில் மீட்டுவிடுவோம்,' என்றனர்.---
சாணிப்பவுடர் குடித்த பெண் சாவு
காரமடையை அடுத்துள்ள கண்டியூர் பகவதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார், 36. கூலி தொழிலாளி.
இவரது மனைவி மலர், 32. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமார் மது அருந்தும் பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனை மிரட்டுவதற்காக மனைவி மலர் சாணி பவுடரை குடித்தார். பின் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், விரைந்து சென்று உயிரிழந்த மலரின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.---