தங்கச் செயின் பறித்தவர் கைது
துடியலூர் அருகே பன்னிமடை அனந்தியா விலாசில் வசிப்பவர் ஸ்ரீ நிதா, 40. இவர் கடந்த, 13ம் தேதி பன்னிமடையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், ஸ்ரீ நிதாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.இது தொடர்பாக தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் தங்க நகையை பறித்துச் சென்ற நபரின் இருசக்கர வாகன எண் மற்றும் வாகனத்தை ஓட்டி சென்ற நபரின் முகம் ஆகியவை பதிவாகி இருந்தன. மேலும், விசாரணையில், தங்க நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த பிரபுதேவா என, தெரிய வந்தது. போலீசார் கேரளா சென்று நபரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
6 கிலோ கஞ்சா விற்றவர் கைது
காரமடை தென்திருப்பதி நால்ரோடு அருகே நேற்று முன் தினம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகே மதுரையை சேர்ந்த பழனிசாமி, 48, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
--குரங்கு குட்டியை வீட்டில் வளர்த்த தம்பதி கைது
கோவை வனச்சரகம், தடாகம் சுற்றுக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் வசிக்கும் பெருமாள்,55, சகுந்தலா,35, தம்பதியர் வீட்டில், குரங்கு குட்டி ஒன்றை வளர்ப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் ஆய்வு செய்த போது, சுமார் இரண்டு மாதங்கள் ஆன குரங்கு குட்டி ஒன்றை அவர்கள் கடந்த ஒரு மாதமாக வீட்டில் கூண்டு வைத்து வளர்த்தது தெரியவந்தது. பெருமாள், சகுந்தலா தம்பதி மீது வனத்துறையினர், வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட குரங்கு குட்டி, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,' மீட்கப்பட்ட குரங்கு குட்டி, மனிதர்களுடன் இருந்ததால் கூட்டத்துடன் இணைவது கடினம். எனவே, குரங்கு குட்டிக்கு வனப்பகுதியில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி, வளர்த்து, அதை வனப்பகுதிக்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.
வீடு புகுந்து ரூ.1.70 லட்சம் திருட்டு
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில் வசிப்பவர் ஆனந்த்பாபு, 41; விவசாயி. இவர் வீரபாண்டியில் தங்கி, மாட்டு வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். கடந்த மூன்று மாதமாக காளி பாளையத்தில் தோட்டத்தில் வசிக்கும் உடல்நிலை சரியில்லாத தந்தையுடன் குடும்பத்துடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் காலை ஆனந்தபாபு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள்ளே பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, 1.70 லட்சம் ரூபாய் காணாமல் போய் இருந்தது. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

