/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை அருகே குட்டையில் முதலை; மக்கள் அச்சம்
/
சிறுமுகை அருகே குட்டையில் முதலை; மக்கள் அச்சம்
ADDED : ஆக 11, 2024 11:24 PM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே தண்ணீர் தேங்கி உள்ள குட்டையில், முதலை இருப்பதை பார்த்த மக்கள் அச்சமடைந்தனர். சிறுமுகை வனத்துறையினர் முதலையைப்பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமுகை அருகே, பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கிராம குடியிருப்பு பகுதி அருகேவுள்ள பள்ளத்தில், மழை நீர் தேங்கி நிற்க குட்டை அமைக்கப்பட்டுள்ளது. வடவள்ளி, பொகலூர், பள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், இக்குட்டையில் தேங்கி நிற்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், பள்ளத்தில் வந்த தண்ணீர் இக்குட்டையில் தேங்கியுள்ளது.
எங்கிருந்தோ வந்த முதலை, குட்டையில் நிரந்தரமாக தங்கி உள்ளது. அவ்வப்போது தண்ணீரில் இருந்து முதலை வெளியே வருவதை, கிராம மக்கள் பார்த்து அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குட்டையை ஆய்வு செய்த பின், முதலை இருப்பதை உறுதி செய்தனர். முதலையைப் பிடிக்க முதல் கட்டமாக, குடியிருப்பு பகுதிகளுக்கும், குட்டைக்கும் இடையே உள்ள காலி இடத்தில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக வலைகளை கட்டியுள்ளனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள செடிகள் மற்றும் முள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பட்டக்காரனூர் கிராம மக்கள் யாரையும், குட்டைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் முதலையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.