/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டாப்பா' வரலாம்! மாவட்ட முன்மாதிரி பள்ளியில் படித்தால்... 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு
/
'டாப்பா' வரலாம்! மாவட்ட முன்மாதிரி பள்ளியில் படித்தால்... 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு
'டாப்பா' வரலாம்! மாவட்ட முன்மாதிரி பள்ளியில் படித்தால்... 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு
'டாப்பா' வரலாம்! மாவட்ட முன்மாதிரி பள்ளியில் படித்தால்... 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு
ADDED : பிப் 07, 2025 08:48 PM
பொள்ளாச்சி,; அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறனை அளவிடும் வகையிலான, 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 'டாப்' மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி பள்ளியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் வகையில், 'ஸ்லாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) எனும் அடைவு தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 8ம் வகுப்பை பொறுத்தமட்டில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தின் கீழ், 'மல்டிப்பிள் சாய்ஸ்' வினாக்கள் முறையில் தேர்வு நடத்தப்பட்டது.
வட்டார வள மையம் வாயிலாக விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, அந்த மதிப்பெண்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மதிப்பெண்களை மையப்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும், 'ைஹடெக் லேப்' வாயிலாக நடத்தப்படும் 'ஆன்லைன்' தேர்வு, அரையாண்டு மற்றும் முழுயாண்டு தேர்வு என, அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்கும் 'டாப்' மாணவர்களை கண்டறியப்படவும் உள்ளனர்.
அதன் வாயிலாக, அந்த மாணவர்களை, மாவட்ட முன் மாதிரி அரசு பள்ளியில் சேர்க்கவும், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஸ்லாஸ்' தேர்வு மட்டுமின்றி, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு என, அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்கும் 'டாப்' மாணவர்கள், முதல் முறையாக எட்டாம் வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்கள், கோவை ஆர்.எஸ்.,புரத்தில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளியில் சேர்க்க அனுப்பி வைக்கப்படுவர்.
அங்கு, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரை படிக்கலாம். குறிப்பாக, அப்பள்ளியில், மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதி தரமான முறையில் அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில், தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது.
இதேபோல, 'நீட்', ஜே.இ.இ., உள்ளிட்ட, உயர்கல்விக்கான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயார் படுத்தவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கான புத்தகம், நோட்டு, சீருடை, உணவு, தங்கும் விடுதி என, அனைத்து செலவினங்களையும் அரசு ஏற்கும். இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
சில நேரங்களில், அரசு முன் மாதிரி பள்ளிக்கு தேர்வாகும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் அனுப்பி வைக்க தயக்கம் காட்டி நிராகரிப்பதும் உண்டு.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.