/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க முடிவு
/
பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க முடிவு
ADDED : மே 21, 2024 11:18 PM
சூலுார்;நிர்வாக வசதிக்காகவும், மத்திய அரசின் நிதியை கூடுதலாக பெறவும், கோவை மாவட்டத்தில் பெரிய ஊராட்சிளை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைய உள்ளது. அதை தொடர்ந்து தேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. எந்தெந்த ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறது.
மாநகராட்சி கிழக்கு எல்லை ஒட்டியுள்ள பட்டணம், சின்னியம்பாளையம், நீலம்பூர், அரசூர் மற்றும் இருகூர் பேரூராட்சி பகுதிகளை இணைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி முகமை சார்பில், பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காவும், மத்திய அரசின் நிதிகளை பெறவும் மக்கள் தொகை அடிப்படையில் பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாநகராட்சி மற்றும் நகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சி நிர்வாகங்கள், தங்கள் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவோ அல்லது அருகில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கவோ வேண்டாம்.
தங்களை ஊராட்சியாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே விடுத்துள்ளனர். இந்நிலையில், எல்லை விரிவாக்கம், கருத்து கேட்பு உள்ளிட்ட பணிகள், மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி உள்ளது.

