ADDED : ஜூலை 10, 2026 06:41 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கருணாபுரியில் ரோடு சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் வழித்தடத்தில், கருணாபுரி இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்ததால், மக்கள் பயணிக்க சிரமப்பட்டனர். இதையடுத்து, ரோட்டை சீரமைக்க, ஊராட்சி பொது நிதியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகும், பணிகள் துவங்கவில்லை. ரோட்டில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் இவ்வழியாக செல்லும் போது சிரமப்பட்டு தடுமாறி செல்கின்றனர். இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
