/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாஞ்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
கட்டாஞ்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 20, 2024 01:53 AM

மேட்டுப்பாளையம்;மருதூர் அருகே உள்ள கட்டாஞ்சி மலைப் பாதையில் வேகத்தடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் கட்டாஞ்சி மலைப்பகுதி உள்ளது. இந்த கட்டாஞ்சி மலைப் பகுதியில் உள்ள சாலை, காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கான இணைப்பு சாலையாக இருந்து வருகிறது. சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சுற்றுசூழலில் உள்ளதால், இச்சாலை வழியாக பயணிக்க இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதிக சிசி திறன் இன்ஜின் கொண்ட பைக்குகளில் இளைஞர்கள் அதி வேகமாக கட்டாஞ்சி மலை பாதையில் பயணிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் வேகதடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த மலைப் பாதையை உள்ளூர் மக்கள் தினமும் பயன்படுத்துகின்றனர்.
சாலையில் ஏறும் போதும், இறங்கும் போதும் மிகவும் மெதுவாக வாகனத்தை இயக்கி விழிப்புடன் இப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் இளைஞர்கள் சிலர் இந்த சாலையை ரேஸ் ஓட்டும் சாலையாகவும், சாகசம் செய்யும் சாலையாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.