/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
/
தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 06, 2025 12:13 AM

பொள்ளாச்சி :
ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் மற்றும் தேர்த் திருவிழாவில், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
ஆனைமலையில் உள்ள, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா துவங்கியது. விழாவையொட்டி, 78 அடி நீளம் உள்ள மூங்கில் கம்பத்தில் கருடாழ்வார் கொடி கட்டப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.
நேற்று, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவ மூர்த்தியான சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் பட்டுப்புடவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாமி கண்ணபிரான் முன்னிலையில், விநாயகப்பெருமான் ஆசியுடன், தர்மராஜா, திரவுபதி அம்மன் திருமண மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஹோம பூஜைகள் நடைபெற்றன. திருக்கல்யாண உற்சவமும், பூச்செண்டு மற்றும் தேங்காய் உருட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர்.
வரும், 11ம் தேதி இரவு கண்ணபிரான் துாது, சுவாமி புறப்பாடு, குண்டத்துக்கட்டில் விஸ்வரூப தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.14ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான் சிரசு ஊர்வலம், 15ம் தேதி குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடக்கிறது.
வரும், 16ம் தேதி குண்டம் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம், 17ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிேஷகம் நடக்கிறது.