/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளில் சேராத 559 மாணவர்கள் மாவட்டத்தில் சேர்க்கைக்கு தீவிர நடவடிக்கை
/
கல்லுாரிகளில் சேராத 559 மாணவர்கள் மாவட்டத்தில் சேர்க்கைக்கு தீவிர நடவடிக்கை
கல்லுாரிகளில் சேராத 559 மாணவர்கள் மாவட்டத்தில் சேர்க்கைக்கு தீவிர நடவடிக்கை
கல்லுாரிகளில் சேராத 559 மாணவர்கள் மாவட்டத்தில் சேர்க்கைக்கு தீவிர நடவடிக்கை
ADDED : பிப் 27, 2025 09:28 PM
கோவை,; மாவட்டத்தில் உயர்கல்வியில் சேராத, 559 மாணவர்களை கல்லுாரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் பல்வேறு பிரிவுகளில், சேர்ந்து பயில்கின்றனர். ஒரு சில மாணவர்கள், உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. தேசிய அளவில், உயர்கல்வி சேர்க்கை விகிதம்(ஜி.இ.ஆர்.,), 28.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் தேசிய விகிதத்தை விட கூடுதலாக, 47 சதவீதமாக உள்ளது.
இதை மேலும் உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'நான் முதல்வன்' திட்டத்தில், பிளஸ்2 முடித்த பின் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் உயர்கல்வியில் சேர வழிவகை செய்யப்படுகிறது.
இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆசிரியர்கள், தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட, ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் உயர் கல்வி கற்காத மாணவர்களை கண்டறிந்து அவர்களை அந்தந்த ஊரில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகளில் சேர்க்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், 2022 - 23 மற்றும், 2023 - 24 கல்வியாண்டில் பிளஸ்2 படித்த மாணவர்களில், 5,728 மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில், 3,011 பேர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தனர். மீதமுள்ள, 2,717 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்காக 'உயர்வுக்கு படி' எனும் முகாம்கள் நடந்தப்பட்டன.
ஐந்து கட்டங்களாக இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், மொத்தம், 1,035 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 476 மாணவர்கள் கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களில் சேர்ந்தனர். மீதமுள்ள, 559 மாணவர்களையும் உயர் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பிளஸ் 2 முடித்ததும், மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதை உறுதி செய்ய உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் அந்தந்த பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் மாணவர்கள் உயர்கல்வி சேர்வதை தொடர்ந்து கண்காணித்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல்கள் வழங்குகின்றனர். உயர்கல்வியில் சேராததற்கான காரணம் கண்டறியப்பட்டு தீர்வு வழங்கப்படுகிறது. திருமணம் முடிந்த மாணவியர், படிக்க ஆர்வம் இல்லாதவர்கள், பணிக்கு சென்றவர்கள் தான் கல்லுாரிகளில் சேரவில்லை. இதுதவிர, புலம்பெயர்ந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களும் அடங்குவர்,' என்றார்.