/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! * பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
/
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! * பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! * பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! * பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
ADDED : ஜூலை 02, 2024 11:15 PM

-நமது நிருபர்-
மாநகராட்சியுடன் அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் இணைவதால், பயனை விட பாதிப்பே அதிகம் இருப்பதால், கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கு எதிராக கருத்து எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி, கடந்த 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதையொட்டியிருந்த குறிச்சி, குனியமுத்துார் மற்றும் கவுண்டம்பாளையம் நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி கிராம ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டன.
14 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், நகரம் மேலும் வளர்ச்சியடைந்து, அருகிலுள்ள உள்ளாட்சிப் பகுதிகளும் நகரமயமாகி வருகின்றன.
பழைய மாநகராட்சிப் பகுதிகளில், 24 x 7 குடிநீர் வழங்கும் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவை, பல ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இணைத்தும் பலன் இல்லை
ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், காளப்பட்டி, துடியலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இப்போது வரை பாதாள சாக்கடைத் திட்டமே வரவில்லை.
மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே குடிநீர் வருகிறது. துாய்மை பணிகள், சரிவர நடப்பதில்லை. பெரும்பாலான ரோடுகள் மோசமாகவுள்ளன; பாதிக்கும் மேற்பட்ட வீதிகள், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மாநகராட்சியுடன் இணைந்ததால், சொத்துவரி, குடிநீர் வரி அதிகமானதே, மக்களுக்குக் கிடைத்த 'பலன்'.
மாநகராட்சியுடன் இணைத்தால் மட்டுமே, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று, அரசு தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. ஆனால் சென்னையைத் தவிர, வேறு எந்த மாநகராட்சிக்கும் நிதி ஒதுக்கீடு என்பது, 'யானைப்பசிக்கு சோளப்பொரி' என்பது போலத்தான் உள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியை மீண்டும் விரிவாக்கம் செய்வதற்கான பணி துவங்கியுள்ளது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவு இருந்தாலும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
பாதிப்புகள் என்னென்ன?
வரி உயர்கிறது; கட்டட அனுமதி, குடிநீர் இணைப்புப் பெறுவது கடினமாகிறது; சான்றுகள் பெறுவதற்கு, பல மடங்கு அதிகமாக லஞ்சம் தர வேண்டியுள்ளது. அதிகாரிகளைச் சந்திப்பதே, அபூர்வமாகவுள்ளது. ஒரு சின்ன வேலைக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கு அதிக துாரம் சென்று அலைக்கழிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. அனைத்துக்கும் மேலாக, ஒரு வார்டின் பரப்பு மிகப்பெரிதாகி விடுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில், ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருப்பதை விட, அதிக வாக்காளர்கள் கொண்ட வார்டுகள் உருவாகின்றன; ஆனால் நிதி மற்றும் பணி ஒதுக்கீட்டில் அப்பட்டமான பாரபட்சம் நடக்கிறது. இவற்றைச் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், மாவட்டம் பெரிதாகும்போது, மக்களின் வசதிக்காக பிரிக்கப்படுகின்றன.
அதனால் புதிய தாலுகாக்கள், பதிவுத்துறை, ஆர்.டி.ஓ., நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய அலுவலகங்கள், ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்படுகின்றன; போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையங்கள் அதிகமாகின்றன; அவை சார்ந்த அதிகாரிகளும் நியமிக்கப்படுவதால், மக்கள் எளிதில் தங்களுடைய தேவைகளைப் பெற முடிகிறது.
நில மதிப்பு உயர்வே பலன்
ஆட்சி மாறும்போதெல்லாம், மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. இதனால் மக்களும் பலவிதங்களில் பயன் பெறுகின்றனர். ஆனால் மாநகராட்சியை விரிவாக்கம் செய்து, அருகிலுள்ள உள்ளாட்சிகளை இணைப்பதால், எதிர்மாறான விளைவுகள் ஏற்படுவதாக பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நில மதிப்பு உயர்வதை தவிர, வேறு எந்த பயனுமில்லை என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
குடிநீர், தெருவிளக்கு, ரோடு மற்றும் சாக்கடை, துாய்மைப்பணி ஆகியவை, சிறப்பாக நடக்குமென்று நினைத்தே, மக்கள் தங்கள் பகுதி மாநகராட்சியுடன் இணைவதை விரும்புகின்றனர். ஆனால் எத்தனை ஆண்டுகளானாலும் அது நடப்பதேயில்லை; பரப்பு அதிகரித்து, வருவாய் கூடினாலும், அலுவலர்கள், துாய்மை பணியாளர் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை என்பது இதற்கு மிக முக்கியக் காரணம்.
சென்னையில் குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மாநகர காவல்துறை பிரிக்கப்பட்டது. பெருநகரமாகிவிட்ட பெங்களூரு மாநகராட்சியைப் பிரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை நகராட்சியாகவும் அந்தஸ்து உயர்த்தலாமே தவிர, இணைக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உண்மையிலேயே, இது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துதான்!