/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் வேலிகளில் அதிக அழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறதா? வனத்துறையினர் சோதனை
/
மின் வேலிகளில் அதிக அழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறதா? வனத்துறையினர் சோதனை
மின் வேலிகளில் அதிக அழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறதா? வனத்துறையினர் சோதனை
மின் வேலிகளில் அதிக அழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறதா? வனத்துறையினர் சோதனை
ADDED : ஆக 02, 2024 06:07 AM

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில், சட்டவிரோதமாக மின் வேலிகளில் மின்சாரம் செலுத்தப்படுகிறதா என வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, வாழை, பாக்கு விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்படுகின்றன.
தேக்கம்பட்டி, ஓடந்துறை, சமயபுரம், ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானை, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொந்தரவு அதிகம் உள்ளது.
வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருக்க, இப்பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் அதனை மிகவும் சுலபமாக மிதித்தும், மரக்கிளைகளை தூக்கி வீசியும் சேதப்படுத்தி விளை நிலங்களுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. அதனால் தொங்கு சோலார் மின் வேலிகளை விவசாயிகள் பலரும் உபயோகித்து வருகின்றனர்.
இதனிடையே வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் வனத்துறையினர் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
வனப்பகுதி மற்றும் காப்பு காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் புதிதாக சோலார் மின் வேலி அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் அமைத்தவர்களும் வனத்துறையிடம் பதிவு செய்ய வேண்டும்.
சோலார் மின் வேலிகளில் அனுமதி அளிக்கப்பட்ட அளவே,மின் அழுத்தம் இருக்க வேண்டும். சட்டவிரோதமாக நேரடியாக அதில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது. மின் அளவை கணக்கிடும் கருவி வாயிலாக மின் வேலிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.
15 நாட்களுக்கு ஒருமுறை மாதம் இரண்டு முறை இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறோம். தொங்கு சோலார் மின் வேலிகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
மின் கம்பங்கள் சேதமாகி இருந்தாலோ, மின் கம்பிகள் அறுந்து தொங்கினாலோ அல்லது மிகவும் தாழ்வாக சென்றாலோ உடனடியாக வனத்துறைக்கும், மின்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதனால் மனித உயிர் மற்றும் வனவிலங்குகள் உயிர் மின் விபத்தில் இருந்து பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.