/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையை பொது இடத்தில் கொட்டாதீங்க!
/
குப்பையை பொது இடத்தில் கொட்டாதீங்க!
ADDED : மே 16, 2024 06:15 AM
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், பொது இடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என, ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பொது இடங்கள் மற்றும் ரோட்டோர பகுதிகளில் மக்கள் சிலர் அலட்சியமாக குப்பை கொட்டுகின்றனர். இதனால், பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், வாகன ஓட்டுநர்கள், குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது குப்பைக்கு தீ வைக்கப்படுகிறது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
தற்போது, கோடை நிறைவடையும் நிலையில் உள்ளது. மழையும் கிராமப்புறங்களில் பெய்ய துவங்கியுள்ளதால் ரோட்டோர குப்பையில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால், துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதை தவிர்க்கும் விதமாக, வீடுகளில் உள்ள குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தூய்மை பணியாளர்களிடம் மக்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும். மேலும், குப்பையை ஊராட்சி பணியாளர்கள் பெறாத பட்சத்தில், தலைவரிடம் முறையிட்டு அதை சரி செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் என்பதால், தண்ணீர் தேங்கும் இடத்தை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். இதனால், மழை நீர் தேங்குவதையும், கொசு உற்பத்தியையும் கட்டுப்படுத்த முடியும்.
கிராமப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஊராட்சி நிர்வாகத்துடன் மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.