/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய்ப்பால் கொடுக்க மறக்காதீங்க!
/
தாய்ப்பால் கொடுக்க மறக்காதீங்க!
ADDED : மார் 07, 2025 08:22 PM

வால்பாறை:
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று, வளைகாப்பு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமுதாய வளைகாப்பு விழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா வரவேற்றார். விழாவில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு பேசும் போது, ''கர்ப்பிணிகள் ரத்தசோகையை தவிர்க்க, இயற்கையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் இயற்கைக்கு மாறான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
''குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிகள் சத்தாண உணவுகளையே அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, அதிக அளவில் பச்சை காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில், கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு, 13 வகையான பொருட்களுடன் சீர்வரிசை தட்டுக்கள் வழங்கப்பட்டு வளைகாப்பு நடந்தது.
விழாவில், திட்ட ஒருங்கிணைப்பாளர் அனீஸ்குமார், மேற்பார்வையாளர்கள் சாந்தி, புஷ்பா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார்.
விழாவில், 250 கர்ப்பிணிகளுக்கு ஐந்து வகை கலவை சத்துமாவு, மதிய உணவு, தட்டு, சேலை, பேரிச்சை, ஆப்பிள், சாத்துக்குடி, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து கண்காட்சி, செல்பி கார்னர் ஏற்பாடு செய்து இருந்தனர்.