/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை அனுமதி கிடைக்காததால் குடிநீர் திட்ட பணிகள் பாதிப்பு
/
வனத்துறை அனுமதி கிடைக்காததால் குடிநீர் திட்ட பணிகள் பாதிப்பு
வனத்துறை அனுமதி கிடைக்காததால் குடிநீர் திட்ட பணிகள் பாதிப்பு
வனத்துறை அனுமதி கிடைக்காததால் குடிநீர் திட்ட பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 24, 2024 10:33 PM

மேட்டுப்பாளையம்;வனப்பகுதியில் குடிநீர் குழாய் கொண்டு செல்ல, வனத்துறையின் அனுமதி கிடைக்காததால், 1.20 கோடி ரூபாய் செலவிலான குடிநீர் திட்ட பணிகள் பாதியில் நிற்கின்றன.
மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இக்குடியிருப்பு பகுதிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.போதிய குடிநீர் கிடைக்காமல் இக்குடியிருப்பு பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு என, தனி குடிநீர் திட்டம் அமைக்க, 1.20 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் துவங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாகியும், இன்னும் பணிகள் முழுமை அடையவில்லை.
இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா கூறியதாவது:
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இக்குடிநீர் திட்ட பணிகள் துவங்கின. ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் பாதி அளவு கூட, பணிகள் நடைபெறாமல் உள்ளன. மேலும் இந்த குடிநீர் திட்டத்திற்கு, வெள்ளிப்பாளையம் சாலையில், சென்னாமலை அருகே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட உள்ளது. அதற்காக ஆற்றின் கரையில் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் கிணறு (இண்டெக் வெல்) கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னாமலை மீது உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, மலைப்பகுதி வழியாக குழாய் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக ஆன்லைன் வாயிலாக வனத்துறையிடம், அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்யப்பட்டது. மூன்று முறை ஆன்லைனில் பதிவு செய்தும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. வனத்துறை அனுமதி கொடுக்க காலதாமதம் செய்வதால், குடிநீர் திட்ட பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. மாவட்ட வனத்துறை நிர்வாகம், மலைப்பகுதியில் குடிநீர் குழாய் கொண்டு செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் குழாய் கொண்டு செல்லும் மலைப்பகுதியில், மரங்களை வெட்டவோ, குழிதோண்டப் போவது இல்லை.
குடிநீர் திட்டப் பணிகளை செய்ய டெண்டர் எடுத்தவர், குழாய் பதிக்கும் பணிகளை தவிர்த்து, பிற பணிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஊராட்சி தலைவர் கூறினார்.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், 'வனப்பகுதியில் எந்த வேலை செய்வது என்றாலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆன்லைனில், வேலை குறித்து பதிவு செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் இருந்து பதிவுகள் செய்வதால், அதிகாரிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, அதன் பிறகு அனுமதி வழங்குவர்,' என்றார்.