/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிரோன்' ஆய்வில் அறிந்து 'ஓட்டு வீடு' வரி! சொத்து வரி மறுசீரமைப்பு
/
'டிரோன்' ஆய்வில் அறிந்து 'ஓட்டு வீடு' வரி! சொத்து வரி மறுசீரமைப்பு
'டிரோன்' ஆய்வில் அறிந்து 'ஓட்டு வீடு' வரி! சொத்து வரி மறுசீரமைப்பு
'டிரோன்' ஆய்வில் அறிந்து 'ஓட்டு வீடு' வரி! சொத்து வரி மறுசீரமைப்பு
UPDATED : ஆக 25, 2024 06:30 AM
ADDED : ஆக 25, 2024 02:07 AM

கோவை:கோவை மாநகராட்சியில், 'டிரோன்' மூலமாக வார்டு வாரியாக அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டு, சொத்து வரி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதனால், பெரும்பாலான கட்டடங்களுக்கு சொத்து வரி மீண்டும் உயர வாய்ப்பிருப்பதால், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
கோவை மாநகராட்சியில், ஐந்து லட்சத்து, 77 ஆயிரத்து, 905 வரி விதிப்புகள் உள்ளன. சில வரி விதிப்புதாரர்கள், 100 ரூபாய், 200 ரூபாய், 300 ரூபாயே சொத்து வரி செலுத்துவது தெரியவந்தது.
மாநகராட்சி பதிவேட்டில், இவ்வரி விதிப்புதாரர்களின் கட்டடங்கள் ஓட்டு வீடு என பதிவாகி இருக்கிறது. இது உண்மைதானா என, ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, ஏராளமான ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டு, புது கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், சொத்து வரியை மாற்றியமைக்கவில்லை.
இதேபோல், குடியிருப்பு பகுதிகளில் பழைய வீடுகளை விலைக்கு வாங்கும் நிறுவனங்கள், புதுப்பித்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றன.
மின் இணைப்பு மட்டும் கமர்சியலாக மாற்றப்பட்டிருக்கிறது. சொத்து வரியை மாற்றாமல், பழைய தொகையையே செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால், முதல்கட்டமாக, 100 ரூபாய் சொத்து வரி செலுத்தும் வரி விதிப்புதாரர்கள் கட்டடம் எவை என, பில் கலெக்டர்கள் மூலம் கள ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பதும், புது கட்டடத்துக்கு சொத்து வரி நிர்ணயிக்காமல், அந்தக்காலத்தில் நிர்ணயித்த தொகையை மட்டும் செலுத்தி வருவது கண்டறியப்பட்டது. அக்கட்டடங்களுக்கு, புதிதாக சொத்து வரி நிர்ணயித்து வசூலிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
'டிரோன் சர்வே'
இதேபோல், சொத்து வரியை மறுசீரமைப்பு செய்யும் வகையில், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து வரி விதிப்பு கட்டடங்களும், 'டிரோன்' மூலமாக அளவீடு செய்யப்படுகிறது.
பதிவேட்டில் உள்ள சதுரடியை காட்டிலும், கூடுதல் பரப்புக்கு கட்டடம் கட்டியிருந்தால், அதன் விபரத்தை குறிப்பிட்டு, பட்டியல் தரப்படுகிறது.
அவை பில் கலெக்டர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது.
27வது வார்டில் எடுத்த ஆய்வு மூலமாக, மாநகராட்சிக்கு கூடுதலாக, 2.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பெரும்பாலான கட்டடங்களுக்கு, சொத்து வரி மீண்டும் உயர வாய்ப்பிருப்பதால், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.