/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருட்கள் உலா; தடுப்பது எப்போது?
/
போதைப்பொருட்கள் உலா; தடுப்பது எப்போது?
UPDATED : ஜூலை 02, 2024 04:30 AM
ADDED : ஜூலை 02, 2024 02:07 AM

ஆண்டுதோறும், ஜூன், 26ம் தேதியை, 'போதைப் பொருள் தடுப்பு மற்றும்சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்' என, ஐ.நா., சபை அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
'போதைப்பழக்கத்துக்கு அடிமையாக மாட்டோம்' என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மட்டும் போதைப்பொருட்களை கட்டுக்குள் கொண்டு வந்து விடுமா?
உள்ளாட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
போதைப்பொருள் தடுப்பு தினத்தின் இந்தாண்டு கருப்பொருள், 'ஆதாரங்கள் தெளிவாக உள்ளன; தடுப்பில் கவனம் செலுத்துங்கள்' என்பது தான்.
'போதை' என்பது சர்வதேசப் பிரச்னையாக இருந்தாலும், துவக்க நிலையில் இருந்து, அதாவது, உள்ளூர் அளவில் இருந்து கிள்ளியெறியப்பட வேண்டும்.
'திருப்பூர் மாவட்ட அளவில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த, 78 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது; 21.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என, உணவு பாதுகாப்புத்துறை புள்ளி விபரம் தருகிறது.
அதிகாரம் தேவை
இது பாராட்டக்கூடியது என்றாலும், ஒரு குறிப்பிட்ட துறையால் மட்டும், ஒட்டு மொத்தமாக போதைப்பொருள் விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது.
உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீஸ் துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சி முகமை துறையினர் உள்ளிட்ட களப்பணிக்கு செல்லும் ஒவ்வொரு அரசு துறையினரும், தாங்கள் செல்லுமிடத்தில் உள்ள கடைகளில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணித்து தடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால், இத்தகைய பொருட்களின் விற்பனை, பயன்பாட்டை வெகுவாக குறைக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -