/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி மாதம் என்பதால் 'டல்' பஸ்கள் இயக்கம் குறைப்பு
/
ஆடி மாதம் என்பதால் 'டல்' பஸ்கள் இயக்கம் குறைப்பு
ADDED : ஆக 03, 2024 05:42 AM
பொள்ளாச்சி: ஆடி மாதம் பிறந்துள்ளதால், பயணியர் கூட்டம் குறைந்து, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் வெளியூர்களுக்கான அரசு பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, திருப்பூர் மற்றும் பழநி வழித்தடங்களில், 73 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழக-கேரள மாநில எல்லையொட்டி பொள்ளாச்சி நகர் அமைந்துள்ளதால், தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பலர், இவ்வழியாகவே சென்று திரும்புகின்றனர்.
இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், அரசு பஸ்களில் பயணியர் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. வார நாட்களில் ஓரளவு பயணியர் வருகை இருக்கும். தற்போது, ஆடி மாதம் என்பதால், பயணியர் கூட்டம் குறைந்து, பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'ஆடி மாதம் காரணமாக, பஸ்களில் பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனால், பொள்ளாச்சி கிளை 1ல், மொத்தம் உள்ள 28 பஸ்களில் 6 பஸ்கள்; கிளை 2ல், 23 பஸ்களில் 4 பஸ்கள், கிளை 3ல், 22 பஸ்களில் 3 பஸ்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.