/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் 'மாணவர் முதல்வர்' தேர்தல்! ஆர்வமுடன் ஓட்டு போட்ட 'வாக்காளர்கள்'
/
பள்ளியில் 'மாணவர் முதல்வர்' தேர்தல்! ஆர்வமுடன் ஓட்டு போட்ட 'வாக்காளர்கள்'
பள்ளியில் 'மாணவர் முதல்வர்' தேர்தல்! ஆர்வமுடன் ஓட்டு போட்ட 'வாக்காளர்கள்'
பள்ளியில் 'மாணவர் முதல்வர்' தேர்தல்! ஆர்வமுடன் ஓட்டு போட்ட 'வாக்காளர்கள்'
ADDED : ஆக 22, 2024 11:34 PM

கோவை:கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் முதல்வரை தேர்வு செய்வதற்கான தேர்தல், முதல் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நேற்று நடந்தது.
கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு, 'குழந்தைகள் பார்லிமென்ட் தேர்தல்' நேற்று நடந்தது. 'போஸ்' நிறுவனம் மற்றும் 'ராக்' அமைப்பு சார்பில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாணவர்கள் ஓட்டு போடும் விதமாக, வகுப்பறை ஒன்றில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நான்கு பேர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என, தேர்தல் நடத்தும் விதிமுறைகளின் அடிப்படையில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு மாணவருக்கும் 'பூத் சிலிப்' வழங்கப்பட்டு பெயர்கள் வரிசையாக அழைக்கப்பட்டு காலை, 11:00 மணி முதல் மதியம், 3:30 மணி வரை தேர்தல் நடந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும், 230 மாணவர்கள் வரிசையாக ஓட்டு போட்டனர்.
இதில், 'மாணவர் முதல்வர்' பதவிக்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் போட்டியிட்டுள்ளனர். தவிர, 6, 7, 8ம் வகுப்புகளில் இருந்து சுகாதாரம், கல்வி, கலாசாரம், நிதி, சட்டம் ஒழுங்கு, விளையாட்டு ஆகிய துறை அமைச்சர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும் தலா நான்கு பேர் போட்டியுள்ளனர்.
ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
நாளைய தலைவர்!
போஸ் குளோபல் சாப்ட்வார் டெக்னாலஜிஸ் நிறுவன, மனித வளத்துறை மூத்த மேலாளர் ஆனந்த் வெங்கடேசன் பேசுகையில்,''நாளைய தலைவராக உங்களில் ஒருவர் வரலாம். ஏன் தமிழக முதல்வராக, இங்கிருந்து வரும் வாய்ப்புள்ளது. அதற்கான அடிக்கல்தான் இது. தேர்தலில் இப்போதே ஓட்டுப்போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களிடம் நல்ல தலைமைப்பண்பு உருவாகவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கீரணத்தம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், 'ராக்' செயலாளர் ரவீந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபலென்சி டெமிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

