/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓவியக்கல்லுாரி மாணவர்களின் படைப்புகளை ரசிக்கலாம் வாங்க!
/
ஓவியக்கல்லுாரி மாணவர்களின் படைப்புகளை ரசிக்கலாம் வாங்க!
ஓவியக்கல்லுாரி மாணவர்களின் படைப்புகளை ரசிக்கலாம் வாங்க!
ஓவியக்கல்லுாரி மாணவர்களின் படைப்புகளை ரசிக்கலாம் வாங்க!
ADDED : ஆக 24, 2024 11:19 PM

கஸ்தூரி சீனிவாசன் 'ஆர்ட் கேலரி' சார்பில், 'ரிதமிக் பேலட்' என்ற பெயரில், ஓவியம் குறித்த தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தொடர் நிகழ்வின், 218வது ஓவியக் கண்காட்சி இப்போது நடந்து வருகிறது.
இதில், ஸ்ரீதர்ஷினி பகுதி நேர ஓவிய கல்லுாரி மற்றும் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலை சார்பில், தேசிய அளவிலான ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி நடக்கிறது.
இதில் 21 மாநிலங்களை சேர்ந்த ஓவியர்கள் வரைந்த, 300 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. ஓவியக்கல்லுாரி மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து, கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், மூத்த ஓவியருமான தர்மலிங்கத்திடம் பேசினோம்.
''இது, ஆண்டுதோறும் தேசிய அளவில் நடத்தப்படும் ஓவியப்போட்டி. போட்டிக்கு வந்திருக்கும் ஓவியங்களை வைத்து, இதை ஒரு கண்காட்சியாக நடத்துகிறோம். இதில் மரபு வழி சார்ந்த ஓவியங்கள் மற்றும் நவீன வகை ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
14 முதல் 80 வயது வரை உள்ள ஓவியர்கள் பங்கேற்றுள்ளனர். நான்கு பிரிவுகளில் சிறந்த ஓவியங்களுக்கு விருது மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஓவியர்களை ஊக்கப்படுத்தவே இந்த போட்டி நடத்தப்படுகிறது,'' என்றார்.
அவரை இடைமறித்து, ''இன்று நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம், ஓவியக்கலையின் மீது எப்படி உள்ளது?'' என்றோம்.
அதற்கு அவர், ''இன்றைக்கு நவீன தொழில்நுட்பங்கள், மீடியாக்கள் வளர்ந்து வந்தாலும், ஓவியத்தின் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பும், ரசனையும் குறையவில்லை. ஏஐ போன்ற உயர் தொழில்நுட்பங்கள் ஓவியக்கலையின் மரபை உடைத்து விடாமல், நம் கலை அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
இந்த கண்காட்சி, வரும் 31ம் தேதி வரை காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.