/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு தேவை
/
மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு தேவை
மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு தேவை
மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு தேவை
UPDATED : ஜூலை 16, 2024 06:16 AM
ADDED : ஜூலை 16, 2024 02:18 AM

கோவை;''தமிழகத்தில் சமீபகாலமாக, மாற்றுத்திறனாளிகளின் சொத்துகளைப் பறிப்பது, பாலியல்ரீதியாக துன்புறுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன,'' என்று தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பராமரிப்புத் தொகை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.300 ஆகவே உள்ளது. அதை குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தித்தர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் புத்தகங்கள் உட்பட கருவிகள் மற்றும் உபகரணங்கள் அனைத்துக்கும், ஜி.எஸ்.டி.,யிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
வேலையில் இருக்கும் அல்லது தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதை குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கல்விக்கு குறைந்த ஒதுக்கீடு
மத்திய அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு மிகவும் குறைந்துள்ளது. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இது கிடைப்பதற்கு, போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு தரும் உபகரணங்கள் விலையைக் குறைக்க வேண்டும். உதாரணமாக, தனியார் ரூ.250க்கு விற்கப்படும் கைத்தடியை (ஸ்டிக்), மத்திய அரசு 75 ரூபாய்க்கு வழங்க வேண்டும்.
வடமாநிலங்களில், மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, மிக அதிகம். கல்வி, சுகாதாரம், நிதி நிலைமை அங்கு குறைவாக இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, மருத்துவத்துறைக்கு கணிசமான தொகையை ஒதுக்கி, சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் வகை நான்காக இருந்து, இப்போது 21 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, இன்னும் நான்கு சதவீதமாகவே உள்ளது. மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை குறையும் வரை, இந்த ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வந்தே பாரத் போன்ற அதிக வசதிகள் கொண்ட ரயில்களை, மத்திய அரசு அறிமுகம் செய்கிறது; ஆனால் அவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கான, எந்த வசதியும் இல்லை. புதிய ரயில்களில் எங்களுக்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
எதிர்பார்த்தோம்; ஏமாந்தோம்
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை முதல்வரின் கைக்குச் சென்றபோது, பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சி அளித்து, வேலையில் சேர்ப்பது தொடர்பான அரசாணையிலேயே இது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பான அரசாணை (எண்: 21) வெளியிடப்பட்டு, அதற்கான அவகாசமும் ஜூலையுடன் முடிகிறது. ஆனால் அந்த அரசாணையால் எந்த முன்னேற்றமும் இல்லை. இடையில் தேர்தல் காரணமாக, அதில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அதன் அவகாசத்தை நீட்டித்து அரசாணை வெளியிட்டு, மாற்றங்களைச் செய்யாதபட்சத்தில், அந்த அரசாணை வெளியிட்டதற்கே எந்த பலனும் இல்லாமல் போய்விடும்.
அதேபோல, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அலைபேசி வழங்க, ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது மானியக்கோரிக்கையில், அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இதில் முதல்வர் கவனம் செலுத்தி, ரூ.30 கோடி என்பதை ரூ.45 கோடியாக உயர்த்தி, ஒதுக்கீடு செய்து, விடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், அலைபேசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சமீபகாலமாக, மாற்றுத்திறனாளிகள் சொத்துக்களைப் பறிப்பது, பெண் மாற்றுத்திறனாளிகளை பாலியல்ரீதியாக, மனரீதியாக துன்புறுத்துவது அதிகரித்துள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையிலும், எங்கள் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், ஓர் உயர் போலீஸ் அதிகாரியை, தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, மனோகரன் தெரிவித்தார்.