/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனதின் மாசுகளை அகற்றி நம்மை உயர்த்துவது தர்மம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளக்கம்
/
மனதின் மாசுகளை அகற்றி நம்மை உயர்த்துவது தர்மம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளக்கம்
மனதின் மாசுகளை அகற்றி நம்மை உயர்த்துவது தர்மம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளக்கம்
மனதின் மாசுகளை அகற்றி நம்மை உயர்த்துவது தர்மம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளக்கம்
ADDED : ஆக 22, 2024 02:20 AM
சூலூர் : நம் மனதில் உள்ள மாசுகளை அகற்றி, நம்மை எது உயர்த்துகிறதோ அதுவே தர்மமாகும், என, சொற்பொழிவாளர் கிருஷ்ண முத்துசாமி பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், நமது தேசம் புண்ணிய தேசம் எனும் விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். இயக்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
'தர்மத்தின் பார்வையும், பாதையும்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் கிருஷ்ண முத்துசாமி பேசியதாவது:
தர்மம் இயற்கையில் இருந்து தோன்றியது. நிலம், நீர் காற்று, ஆகாயம், நெருப்பு உள்ளிட்ட பஞ்ச பூதங்களிலும் தர்மம் உள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் மரத்தை, நதியை, சூரியனை, சந்திரனை வழிபட்டனர். ஒவ்வொரு படைப்பிலும் இறைவனின் அம்சம் உள்ளது என்பது உண்மை.
மனிதனுக்கு சுதந்திரமாக சிந்திக்கும் திறன் உள்ளது. அதன் மூலம் அவன் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறான். இச்சா எனும் அந்த திறனால், விலங்குகளையும் பண்படுத்துகிறான் மனிதன். அதனால் தான் அசுர பலம் கொண்ட யானையும் மனிதனுக்கு அடங்கி நடக்கிறது. தானம் செய்வது மட்டும் தர்மம் அல்ல. அது தர்மத்தின் சிறு பகுதி மட்டுமே.
தர்மம் என்பது வாழ்க்கையின் கடமைகள் ஆகும். வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகளே தர்மமாகும். நம் மனதில் உள்ள பொறாமை, கோபம், பேராசை உள்ளிட்ட மாசுகளை அகற்றி, நம்மை வாழ்வில் உயர்த்துவதே தர்மமாகும். தர்மம் எனும் அறவழியில் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.