/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாழடைந்த கட்டடத்தில் போலி எஸ்.ஐ., கைது
/
பாழடைந்த கட்டடத்தில் போலி எஸ்.ஐ., கைது
ADDED : ஆக 23, 2024 01:47 AM
போத்தனூர்;போலீஸ் எஸ்.ஐ., எனக் கூறி, மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஈச்சனாரி அடுத்த மாச்சேகவுண்டன்பாளையத்தில், தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன், வீரபத்ரன் என்பவர் அவ்வீட்டிற்கு குடிவந்தார். அப்போது அவரது ஆதார் அட்டை மற்றும் அவரது சகோதரர் வினு என்பவரின் போலீஸ் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொடுத்தார்.
கடந்த, 29ல் தினேஷ் அங்குள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு போலீஸ் அடையாள அட்டையில் இருந்த வினு நிற்பதை கண்டார். அவரிடம் எங்கு பணிபுரிகிறீர்கள் என கேட்டபோது, அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளேன் என, வினு கூறியுள்ளார்.
அப்போது வினு, தான் அமைச்சருக்கு 'எஸ்கார்ட்' ஆக இருப்பதால், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், அரசு வேலை வாங்கித்தருகிறேன், என கூறியுள்ளார்.
தொடர்ந்து 3-ம் தேதி, தினேஷ் அங்கு சென்றபோது வீட்டின் முன் பொருட்கள் சிதறிக் கிடந்தன. அருகேயுள்ளவரிடம் விசாரித்தபோது யாரும் வீட்டிற்கு வராதது தெரிந்தது.
இதையடுத்து, தினேஷ் தன்னிடமுள்ள மாற்று சாவியை பயன்படுத்தி, வீட்டை திறந்து உள்ளே சென்றார். ஏர் பிஸ்டல் ஒன்று, போலீஸ் தடி நான்கு, மெட்டல் டிடெக்டர் ஒன்று, தமிழ்நாடு போலீஸ் என அச்சிடப்பட்ட அடையாள அட்டை பொருத்தும் டேக்குகள், போலீஸ் எஸ்.ஐ., அடையாள அட்டை, போலீஸ் என எழுதப்பட்ட பிளாஸ்டிக் அட்டை உள்ளிட்ட பல பொருட்கள் காணப்பட்டன.
அதிர்ச்சியடைந்த தினேஷ், அனைத்து பொருட்களுடன் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்தார். அவரது புகாரில் போலீசார் வினுவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வினு, மாச்சேகவுண்டன்பாளையம், எஸ்.ஆர்.கார்டனிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் வினுவை கைது செய்தனர்.
வினு மீது, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., எனக் கூறி மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. தற்போது கோர்ட்டில் வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

