/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலார் மின் கம்பி வேலி அகற்றியதால் விவசாயிகள் கவலை: காட்டுப் பன்றிகளின் தொந்தரவு அதிகரிப்பு
/
சோலார் மின் கம்பி வேலி அகற்றியதால் விவசாயிகள் கவலை: காட்டுப் பன்றிகளின் தொந்தரவு அதிகரிப்பு
சோலார் மின் கம்பி வேலி அகற்றியதால் விவசாயிகள் கவலை: காட்டுப் பன்றிகளின் தொந்தரவு அதிகரிப்பு
சோலார் மின் கம்பி வேலி அகற்றியதால் விவசாயிகள் கவலை: காட்டுப் பன்றிகளின் தொந்தரவு அதிகரிப்பு
ADDED : ஆக 31, 2024 01:44 AM

மேட்டுப்பாளையம்:சோலார் மின் வேலிகளை அகற்றியதால், காட்டு பன்றிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனால் தீவனப்பயிர், காய்கறிகள், வாழை மரங்கள் சேதம் அடைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
விவசாயிகளின் அன்றாட பணத் தேவைகளை பூர்த்தி செய்ய, கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளுக்கு தேவையான தீவனப் பயிர்களை, தமது விவசாய நிலத்தில் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். மேலும் மீதமுள்ள நிலத்தில் வாழை மற்றும் காய்கறி செடிகளை பயிர் செய்து வருகின்றனர்.
காய்கறிகள், வாழை, தீவனப்பயிர் ஆகியவற்றை யானைகள், காட்டு பன்றிகள் இரவில் சேதம் செய்து வந்தன. அதனால் இந்த விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் சோலார் மின் வேலிகளை அமைத்திருந்தனர். இதனால் யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகள், விவசாய விளை நிலங்களுக்கு வருவது குறைந்தது.
சோலார் மின்கம்பி வேலிகள் அகற்றம்
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தோலம்பாளையத்தில் சோலார் மின்கம்பி வேலியில் சிக்கி ஒரு பெண் இறந்தார். அந்த நிலத்தின் விவசாயி மீது, காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அச்சம் அடைந்த பெரும்பாலான விவசாயிகள், சோலார் மின் வேலியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காட்டுப் பன்றிகளின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன.
இதுகுறித்து காரமடை அடுத்த முத்துக்கல்லூரில் உள்ள குறிஞ்சி உழவர் மன்ற விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் வாழை, காய்கறிகள், கால்நடை தீவனப் பயிர்களை, யானை மற்றும் காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க, சோலார் மின்கம்பி வேலி அமைத்திருந்தனர். இரவில் மதுபோதையில் வரும் 'குடி'மகன்கள் இந்த மின் வேலிகள் மீது விழுகின்றனர். ஒருவர் மின் வேலி மீது விழுந்தவுடன் எழுந்தால், எவ்வித பாதிப்பும் இருக்காது. தொடர்ச்சியாக மின் வேலி மீது படுத்து கிடந்தால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
தோலம்பாளையம், வெள்ளியங்காடு பகுதியில் சோலார் மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். போலீசார் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. இது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தங்களது விவசாய நிலங்களில் போட்டிருந்த, சோலார் மின் வேலியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பற்றாக்குறை
விவசாய நிலங்களில் சோலார் மின் கம்பி வேலி இல்லாததால், இரவில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக விவசாய நிலங்களில் புகுந்து, காய்கறிகள், தீவனப் பயிர்கள் மற்றும் வாழை மரங்கள் ஆகியவற்றை சேதம் செய்து வருகின்றன. அதோடு யானைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் பால் விற்பனை செய்வதன் வாயிலாக, கிடைக்கும் வருமானத்தை கொண்டு, குடும்ப செலவை ஈடுகட்டி வருகின்றனர். எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.