/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது போதையில் தம்பி குத்தி கொலை; ஐந்து பேர் கைது
/
மது போதையில் தம்பி குத்தி கொலை; ஐந்து பேர் கைது
ADDED : செப் 09, 2024 12:35 AM

கோவை;கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல், 30; செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது அண்ணன் ரங்கன். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம், குடும்பத்தினர் செய்து கொண்டு இருந்தனர். அன்று இரவு கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மது அருந்தியதாக தெரிகிறது.
அதன்பின் போதையில், கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் செல்வபுரம் அடுத்த அசோக் நகர், பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த கோகுலின் உறவினர் ஜப்பான் என்கிற பிரவீனிடம், தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். ஆத்திரம் அடைந்த பிரவீன், நண்பர்களை அழைத்து வந்து கோகுலை தாக்கினார். பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் கோகுலை சரமாரியாக குத்தி தப்பினர்.
ரத்தம் சொட்ட சொட்ட சிறிது துாரம் நடந்து சென்ற கோகுல், அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து மயங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், கோகுலின் உடலை மீட்டனர்.
வழக்கு பதிந்து, ஜப்பான் என்கிற பிரவீன், 29, நாகராஜ், 27, அவரது தம்பிகள் சந்துரு, 25, சூரியா, 26, மற்றும் சஞ்சய், 25 ஆகிய, 5 பேரை கைது செய்தனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோகுலும், பிரவீனும் உறவினர்கள். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன், கோகுல் வீட்டில் டி.வி.,யை அதிக சத்தமாக வைத்து பார்த்துள்ளார். இதனை பிரவீன் கண்டித்துள்ளார். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. மோதல் ஏற்பட்டு, கொலையில் முடிந்துள்ளது' என்றார்.
அண்ணனின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.