/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்; கண்காணிப்பு தீவிரம் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வைத்திருந்தால் சிக்கல்
/
ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்; கண்காணிப்பு தீவிரம் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வைத்திருந்தால் சிக்கல்
ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்; கண்காணிப்பு தீவிரம் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வைத்திருந்தால் சிக்கல்
ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்; கண்காணிப்பு தீவிரம் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வைத்திருந்தால் சிக்கல்
ADDED : மார் 22, 2024 10:46 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, வால்பாறையில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, 31 லட்சம் ரூபாயை பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, முறையான ஆவணங்களின்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணிப்பு செய்யப்படுகிறது.
* பல்லடம் ரோடு, ராசக்காபாளையம் அருகே பறக்கும் படை குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், பாலக்காடு திருச்சூரை சேர்ந்த அன்வர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 2.50 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
* கோபாலபுரம் சோதனைச்சாவடி அருகே, நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை செய்த போது, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முருகானந்தம், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 95 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* கோபாலபுரத்தில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டு, காரில் வந்த கேரளா மாநிலம் கண்ணுாரை சேர்ந்த அப்துல் நபீர், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* பறக்கும்படை குழுவினர், கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், கோழிக்கோட்டை சேர்ந்த மனோஜ், முறையான ஆவணங்களின்றி, 81 ஆயிரம் ரூபாய் பணம் வைத்து இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
* வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட, அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வங்கி ஏ.டி.எம்.,க்கு பணம் நிரப்பபக்கூடிய வாகனம் வந்தது. அதில், சோதனையிட்ட போது, 1.04 கோடி ரூபாய் இருந்தது. அதில், முறையான ஆவணங்களின்றி இருந்த, 24 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து, பணம் எடுத்து செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், வங்கி மேலாளர், வருமான வரித்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால், பணம் விடுவிக்கப்பட்டது.
* வளந்தாயமரம் சோதனைச்சாவடி நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் வந்த கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த ஆதிநாராயணன், மணி ஆகியோர், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 74 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சி அருகே அனுப்பர்பாளையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்த போது, ஏரிப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி, காரில் முறையான ரசீது இன்றி மதுபாட்டில்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வாயிலாக, மதுவிலக்கு போலீசாரிடம ஒப்படைக்கப்பட்டது.
உடுமலை
* உடுமலை தொகுதி கூடுதல் பறக்கும் படை-1 குழுவினர், அந்தியூர் போலீஸ் செக்போஸ்ட் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, கேரள மாநிலம், மரஞ்சேரியை சேர்ந்த முகமது அன்சீப் என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 70,150 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
* நிலையான கண்காணிப்பு குழுவினர், பெதப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த சூலுார், மந்திரிபாளையத்தை சேர்ந்த ராமராஜிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய்பறிமுதல் செய்தனர்.
* நிலையான கண்காணிப்பு குழு-1ல் உள்ளோர், பொள்ளாச்சி தாலுகா, கோட்டூர் சமத்துார் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த வினோத்கண்ணன், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று ஒரே நாளில், மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம், 2.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினரால், உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும், தொகை உதவி தேர்தல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டு, மாவட்ட கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்களை, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்து, தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

