/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமையுங்க! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமையுங்க! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமையுங்க! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமையுங்க! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 10:33 PM

பொள்ளாச்சி : 'பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் போது, தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்,' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார் முன்னிலை வகித்தார்.
அரசுத்துறை அதிகாரிகள், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் வயநாட்டில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
விவசாயிகள் பேசியதாவது:
குளம், குட்டைகளை துார்வாரினால் தான், மழைநீர் சேகரிக்க முடியும். வண்டல் மண் எடுக்க முன்னரே அனுமதி வழங்கியிருந்தால் பயனாக இருந்திருக்கும். சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க சூழல் ஆர்வலர்கள் கூறுவதை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், வயநாடு போன்று இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
காயர்பித் போதிய பாதுகாப்பின்றி உலர வைப்பதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடுமையான வறட்சி காலத்தில் முதலாம் மண்டல பாசனத்துக்கு நீர் திறந்த போது, கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்ததால் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கொண்டு செல்லப்பட்டது.
அதுபோன்று, இம்முறையும் கண்காணிப்பு செய்து தடையின்றி தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.டி.சி.பி., அனுமதி வழங்கும் போது, நீர் நிலைகளில் இருந்து, 15 மீட்டர் தள்ளி தான் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், கால்வாய் அருகே லே-அவுட் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் நடவு செய்யவும், கதிர் அறுவடை செய்யவும் டிராக்டர் மற்றும் இயந்திரங்களை வழங்க வேண்டும். கேரளாவில், நெல் கிலோவுக்கு, 29 ரூபாய், தமிழகம், 23 ரூபாய் அரசு கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. கேரளாவை போன்று கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஆற்றில் இருந்தும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.வேலை உறுதி திட்டத்தில், இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். கேள்வி கேட்டால், ஊழியர்கள் முறையாக பதில் கூறுவதில்லை.
தொண்டாமுத்துாரில் மூன்று ஏக்கர் பரப்பளவில் சின்னகுட்டை உள்ளது. இந்த குட்டையை சுற்றி, ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக குட்டை வறண்டுள்ளதால், விவசாய கிணறுகள், கிராம பொது கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குட்டையில் இருந்து, நான்கு கி.மீ., துாரத்தில் பாலாற்றில் கடந்த, 15 நாட்களாக மழைநீர் வெள்ளமாக செல்கிறது. இவை வீணாக செல்வதை தடுக்க குழாய் அமைத்து, குட்டைக்கு தண்ணீரை திருப்ப வேண்டும். இதனால், நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
சப் - கலெக்டர் பேசுகையில், ''துறை அதிகாரிகள், விவசாயிகள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். பி.ஏ.பி., நீர் திருட்டை தடுக்க நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்,'' என்றார்.