/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
/
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
ADDED : ஜூன் 08, 2024 01:40 AM

கோவை;எங்கும், எதிலும் தொழில் நுட்பம்... துல்லியமான வேலை, அத்தனையையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளது, 'இன்டெக் 2024' கண்காட்சி.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், கொடிசியா நடத்தும் இன்டெக் 2024 கண்காட்சியின் 20வது பதிப்பு, இரண்டு நாட்களாக நடக்கிறது. உள்ளுர் முதல் உலகளவில் வரை இன்ஜினியரிங் சார்ந்த தொழில்நுட்பங்களை, ஒரே இடத்தில் காண வழி வகுக்கிறது இந்த கண்காட்சி.
தொழிலை புதுப்பிக்க முனைவோரும், புதிய தொழில் தொடங்கவோரும் மட்டுமல்ல, இளைய தலைமுறையினர் பார்த்து பரவசமடையும் கண்காட்சியாகவும், இன்டெக் 2024 அமைந்துள்ளது.
கோவையை சேர்ந்த பல பெரும் நிறுவனங்கள் தயாரிப்புகளையும் விற்பனை பொருட்களையும் காட்சிப்படுத்தியுள்ளன.
மூடப்பட்ட ஸ்டைலில் லேத்
குறிப்பாக, இரும்பிலிருந்து பொருட்களை உருவாக்கும் லேத்கள், கோவையிலேயே தயாரிக்கப்படுகின்றன. லட்சுமி மெஷின்ஸ் நிறுவனம் தயாரிக்கும், அதிநவீன கம்ப்யூட்டரில் இயக்கப்படும் பல தொழில்நுட்ப பொருட்களை செய்யும் லேத்துக்கள், அனைவரையும் கவர்ந்துள்ளன.
ஒரு இயந்திரத்தை தயாரிக்கும் இயந்திரமாக இந்த லேத், முன்பு திறந்த நிலையில் இருக்கும். ஆனால், தற்போது சிஎன்சி முறையில், கம்ப்யூட்டர் புரோக்ராம் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும், மூடப்பட்ட நிலையில் உள்ள லேத், அதிநவீன முறையில் இயங்குகின்றன.
பொருட்களை சேதமின்றி உருவாக்குவதோடு, சூற்றுச்சூழலுக்கும் கேடு இல்லாமல், உருவாக்கப்படுகின்றன.
பிரமிக்க வைக்கும் ரோபோட்டுகள்
சர்வதேச அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதில், மனித உழைப்பு குறைந்து வருகிறது. மனித மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து விட்டு, இயந்திரங்களில் பொருட்களை உருவாக்கி விடுகின்றனர்.
இந்த வகையில், மனிதனை போலவே, வளைந்து நெளிந்து, குனிந்து எழுந்து, சுழன்று வேலை செய்யும் வகையில், நிலையான ரோபோக்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஒரே மாதிரியான வேலைகளை பல மணி நேரம் செய்யும் மனிதன், ஓய்ந்து விடுவதுண்டு. ஓய்வு தேவைப்படும். ஆனால், இந்த இயந்திரங்கள் எவ்வளவு மணி நேரமும் ஒரே மாதிரியான வேலையை ஓய்வில்லாமல் செய்ய முடியும்.
செயற்கை நுண்ணறிவு
தொழிற்சாலைகளை தானியங்கி முறையில், இயங்க வைக்கும் முயற்சியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு முறையில் செயல்படும் கேமராக்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஆட்டோ போக்கஸ் கேமராக்கள், இவற்றில் தெரியும் பொருட்களை உணர்ந்து, அதை எடுத்துச் சென்று பொருத்துதல், நகர்த்துதல் போன்ற பணிகளையும் மேற்கொள்கின்றன.
கட்டுமான இயந்திரங்கள்
மிகவும் துல்லியமாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சிகரமாகவும், கற்பனைக்கு அப்பாற்பட்ட வீடுகளை உருவாக்குவதில் கையடக்க கருவிகள் பெரிதும் உதவுகின்றன. கட்டுமானத்தில், துளையிடுதல், பாலீஷ் செய்தல், துாசுகளை கவர்தல், கடினமான உலோக பொருட்களை வெட்டுதல், பளபளப்பாக்குதல் என சிறு சிறு இயந்திரங்கள் பெரும் வேலைகளை முடிக்கின்றன. நுாற்றுக்கும் மேற்பட்ட வேலைகளுக்கு, பல்வேறு விதமான கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தண்ணீர் தீர்வு தரும் இயந்திரங்கள்
பொதுவாக தண்ணீரை துாய்மையாக்கி தரும் இயந்திரங்கள் உள்ளன. ஆனால், எந்த அளவுக்கு தண்ணீர் துாய்மையாக உள்ளது, தண்ணீரின் அமில, காரத்தன்மை என்ன என்பதையும் காட்டும் கருவியோடு, பில்டர்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளன.
பல்வேறு வேலைகளுக்கு குறிப்பாக, குடிக்கவும், குளிக்கவும், பாத்திரங்கள் கழுவ, சமைக்க என பல்வேறு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு வகையான தண்ணீரை பரிசோதனை செய்ய கருவிகள் உள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் முதல், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் வரை தீர்வுகளை தரும் இயந்திரங்கள் கண்காட்சியில் உள்ளன.
ஒரு விசிட் அடிக்கலாம்!
இதுபோன்ற எண்ணற்ற கருவிகளும், இயந்திரங்களும், பயன்பாட்டு பொருட்களும், 'இன்டெக் 2024' கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சி, வரும் 10ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணிவரை நடக்கிறது. மதியம் 2:00 மணி வரை வணிக பார்வையாளர்களுக்கும், மாலை 3:00 மணிக்கு மேல் பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி கட்டணம் உண்டு.