/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம ஊராட்சி நிர்வாகங்கள் முடக்கம் 68 நாட்களாக நிதி விடுவிக்கப்படவில்லை
/
கிராம ஊராட்சி நிர்வாகங்கள் முடக்கம் 68 நாட்களாக நிதி விடுவிக்கப்படவில்லை
கிராம ஊராட்சி நிர்வாகங்கள் முடக்கம் 68 நாட்களாக நிதி விடுவிக்கப்படவில்லை
கிராம ஊராட்சி நிர்வாகங்கள் முடக்கம் 68 நாட்களாக நிதி விடுவிக்கப்படவில்லை
ADDED : மே 09, 2024 04:19 AM
அன்னுார், : தமிழக அரசு, 68 நாட்களாக, நிதி விடுவிக்காததால் ஊராட்சிகளில் சம்பளம் தர முடியாமல், குடிநீர் குழாய் பராமரிப்பு பணி செய்யாமல் நிர்வாகங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 12,526 ஊராட்சிகளையும், கடந்த நவம்பர் மாதம் முதல், தமிழக அரசு, இந்தியன் வங்கி கிளையில் புதிய வங்கி கணக்கு துவக்க அறிவுறுத்தியது. ஊராட்சியில் வசூலிக்கப்படும் அனைத்து வரியினங்களையும் இந்த வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தியது.
ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பெயரிலான இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தொகை பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 65 நாட்களாக ஒரு ரூபாய் கூட தமிழகத்தில் எந்த ஊராட்சிக்கும் விடுவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அன்னுார் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை :
கடந்த பிப்., 29ம் தேதி ஊராட்சிகளுக்கு தமிழக அரசு நிதி விடுவித்தது. அதன் பிறகு 68 நாட்கள் ஆகி விட்டது. ஒரு ரூபாய் கூட ஊராட்சிகளுக்கு வழங்கவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 65 ஊராட்சிகளில் ஏப்ரல் மாத சம்பளமே இதுவரை ஊழியர்களுக்கு வழங்கவில்லை. கடும் வறட்சி நிலவி வருகிறது. உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணி செய்ய முடியவில்லை. புதிய போர்வெல்கள் போட முடியவில்லை.
தெரு விளக்குகள் புதிதாக பொருத்த முடியவில்லை. எந்த அத்தியாவசிய பணியும் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கி கிடக்கின்றன.
இது குறித்து ஊரக வளர்ச்சி துறை கோவை மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தமிழக அரசு உடனடியாக ஊராட்சிகள் செலுத்திய சொந்த நிதியை விடுவிக்க வேண்டும். விடுவித்தால் மட்டுமே, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியும். பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்,' ஊராட்சியில் பல போர்வெல் கோளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சிறிது நேரம் மட்டுமே செயல்படுகின்றன. புதிய போர்வெல்கள் போடவும், ஏற்கனவே உள்ள போர்வெல்களை ஆழப்படுத்தவும் நிதி தேவைப்படுகிறது.பொதுமக்களின் புகாருக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்,' என்றனர்.