/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 06, 2024 02:43 AM

வால்பாறை:அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 108 விநாயகர் சிலைகள் வரும், 7ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. தொடர்ந்து, ஒரு வார பூஜைக்கு பின், வரும் 15ம் தேதி, கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக கொண்டு சென்று மாலை, 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விநாயகர் சிலைகளை எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் மட்டுமே வைக்க வேண்டும். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை வால்பாறை நகருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு கொண்டு வந்து, மாலையில் விசர்ஜனம் செய்ய வேண்டும்.
ஊர்வலத்தின் போது பிற மதங்கள் குறித்து கோஷம் எழுப்பக்கூடாது. பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் சதீஸ், பொதுசெயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.