முத்துக்கவுண்டன்புதுாரில் குப்பையால் தொழில் பாதிப்பு
முத்துக்கவுண்டன்புதுாரில் குப்பையால் தொழில் பாதிப்பு
ADDED : ஜூன் 19, 2026 09:42 PM
முத்துக்கவுண்டன்புதூர்: முத்துக்கவுண்டன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அருகில் சில பெரு நிறுவனங்களும் உள்ளன.
முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பையை, தொழிற்சாலைகளை ஒட்டியுள்ள நீர்நிலை மற்றும் வண்டி தடத்தில் கொட்டி வருகிறார்கள். இதில் இருந்து கிளம்பும் கடும் துர்நாற்றம், புகை மூட்டத்துக்கு மத்தியில் தான் தொழிற் கூடங்கள் இயங்கி வருகின்றன.
முத்துக்கவுண்டன்புதூர் தொழிற்பூங்கா உரிமையாளர் நலச்சங்கத்தினர் கூறுகையில், ‘குப்பையில் இருந்து அதிக ஈ உற்பத்தியாகி தொழிற்சாலைக்குள் பரவுகின்றன. பிளாஸ்டிக் குப்பை பறந்து தொழிற்சாலை வளாகம் முழுவதும் குப்பை கூளமாகிறது. நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. எங்கள் தொழிற்கூடங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவதும் குறைந்து வருகிறது. இங்கு தொழில் துவங்க தயங்குகின்றனர்.
இந்த பிரச்னையை சரி செய்ய கோரி 6 ஆண்டுகளுக்கு மேலாக கலெக்டர், அமைச்சர்கள், முதல்வர் என பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. த.வெ.க. ஆட்சியிலாவது அங்கு குப்பை கொட்டுவதற்கு தடை செய்ய வேண்டும். இருக்கும் குப்பையை 5 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும்’ என்றனர்.
