ADDED : மார் 11, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், : நெகமம் - காட்டம்பட்டி ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதில், காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரே, ரோட்டின் ஓரத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுச்சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில ஊராட்சிகளில் குப்பையை தரம் பிரித்து பெற்று, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகின்றனர். ஆனால் காட்டம்பட்டியில், ரோட்டின் ஓரத்தில் குப்பை குவிந்து கிடப்பதால், திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், இங்குள்ள குப்பையை நீண்ட நாட்களாக அகற்றாததால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையை அகற்றி, ரோட்டின் ஓரத்தில் முக்கிய இடங்களில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.