/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்
/
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்
ADDED : செப் 15, 2024 11:49 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நாகராஜ் என்ற நவீன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் நாகராஜ் என்ற நவீன். ஏற்கனவே, இவர் மீது கஞ்சா கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த, மே மாதம், 15ல், நவீன் தலைமையில் அவரது தம்பி கனகராஜ், கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியைச்சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோர் மகேந்திரா சுப்ரோ வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச்சென்றுள்ளனர்.
அப்போது, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினரால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரேஷன் அரிசி கடத்திய வாகனம் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது.
அதேநேரம், ஜெகதீஷ் மற்றும் கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நவீனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் இவரை கைது செய்ய, கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் கிராந்திகுமார், சம்பந்தப்பட்ட நவீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே, கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ளவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல், கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.