/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகளால் ஆபத்து
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகளால் ஆபத்து
ADDED : ஆக 20, 2024 10:15 PM

வால்பாறை : வால்பாறையில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறையிலிருந்து, ரொட்டிக்கடை, அய்யர்பாடி, அட்டகட்டி, ஆழியார் வழியாக பொள்ளாச்சி ரோட்டில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
இந்நிலையில், ஆழியாறில் இருந்து வால்பாறை வரையிலும், ரோட்டின் இருபுறமும், செடிகள் வளர்ந்துள்ளதால், பல இடங்களில் ரோடு குறுகலாக காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருப்பதால், மலைப்பாதையில் விபத்து அபாயம் நிலவுகிறது.
இதேபோல், வால்பாறையிலிருந்து ஈட்டியார் வழியாக சின்கோனா (டான்டீ) செல்லும் ரோட்டில், செடிகளின் ஆக்கிரமிப்பால், எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநர்களின் பார்வைக்கு தெரிவதில்லை. இதனால், அந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கொண்டை ஊசி வளைவில் இருந்து, அய்யர்பாடி ஜே.இ., பங்களா வழியாக கருமலை செல்லும் ரோட்டிலும், மாணிக்கா எஸ்டேட் வழியாக குரங்குமுடி எஸ்டேட் செல்லும் ரோட்டிலும், செடிகள் அதிக அளவில் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன.
இதனால், யானைகள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில், பகல் நேரத்திலேயே மக்கள் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே, வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மலைப்பாதையில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,'ஆழியாறு முதல் வால்பாறை வரை, ரோட்டோரம் உள்ள செடிகள் வெட்டபட்டுள்ளது. பருவமழை தீவிரமாக பெய்வதால் செடிகள் வெட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மற்ற எஸ்டேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
அலட்சியத்தால் விபத்து
வால்பாறை மலைப்பாதையில் வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில், ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால் வனவிலங்குகள் எதிரே வந்தாலும், வாகனங்களில் செல்வோருக்கு தெரிவதில்லை. எதிரில் வாகனம் வரும் போது ஒதுங்கி நிற்கக்கூட முடியாத சூழல் உள்ளது. இதனால், வால்பாறை மலைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- பெருமாள், சோலையாறு எஸ்டேட்.
அச்சுறுத்தும் வனவிலங்குகள்
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ளது. மலைப்பாதையில், ரோட்டை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. வால்பாறை - பொள்ளாச்சி ரோடு, சோலையாறு, சின்கோனா, குரங்குமுடி செல்லும் ரோடுகளில் செடிகள் வளர்ந்துள்ளது. புதருக்குள் சிறுத்தை, யானை, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் பதுங்க வாய்ப்புள்ளது. வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே வாகனங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. ரோட்டோரத்தில் உள்ள செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
-சுனில், வால்பாறை.