ADDED : மே 22, 2026 07:31 PM
கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், ‘நிதி ஆப்கே நிகட்’ (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த மாதம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும், 27ம் தேதி கூட்டம் நடக்கிறது. கோவையில் நவ இந்தியா அருகில் உள்ள ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரி அரங்கிலும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேயர்கோம்பையில் உள்ள ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளியிலும் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை நேரில் முறையிடலாம்.
யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் தேவை. பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
பங்கேற்க முடியாத உறுப்பினர்கள், அனைத்து வேலை நாட்களிலும் கோவை மண்டல அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி, ஊட்டி, குன்னுாரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று பார்க்கலாம்.
இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
