/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை, செல்லப்பிராணிகளுக்கு கிடைக்குது வீடு தேடி சிகிச்சை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கால்நடை, செல்லப்பிராணிகளுக்கு கிடைக்குது வீடு தேடி சிகிச்சை; விவசாயிகள் மகிழ்ச்சி
கால்நடை, செல்லப்பிராணிகளுக்கு கிடைக்குது வீடு தேடி சிகிச்சை; விவசாயிகள் மகிழ்ச்சி
கால்நடை, செல்லப்பிராணிகளுக்கு கிடைக்குது வீடு தேடி சிகிச்சை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 13, 2024 11:33 PM

மேட்டுப்பாளையம் : நடமாடும் ஆம்புலன்சால், கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு வீடு தேடி சிகிச்சை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், தொலைதூர கிராமங்களில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ம் தேதி துவக்கி வைத்தார்.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் இத்திட்டம் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ் வாயிலாக பெள்ளாதி, பெள்ளேபாளையம் என 17 ஊராட்சிகளில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், நோய் தீர்க்கும் சுகாதார நடவடிக்கைகளை அந்தந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கே சென்று அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கால்நடை துறை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-
நடமாடும் ஆம்புலன்ஸில் 1 கால்நடை மருத்துவர், 1 கால்நடை உதவியாளர், 1 ஓட்டுநர் உள்ளிட்டோர் இருப்பார்கள். காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில், கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணி மேற்கொள்ளப்படுகிறது. பிற்பகலில் அழைப்பு மையம் வாயிலாக பெறப்படும், அழைப்புகளில், அவசர சிகிச்சை மேற்கொள்ள வாகனம் பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளையும் சிகிச்சைக்காக ஆர்வமுடன் மக்கள் கொண்டு வருகின்றனர். அவசர அழைப்பிற்கு 1962 எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'தொலைதூர கிராமங்களில் இருந்து, கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவது மிகவும் கடினமான ஒன்று. தற்போது இந்த ஆம்புலன்ஸால், இது எளிமையாகி உள்ளது, என்றனர்.